ஜகார்த்தா: இந்தோனீசியாவில் சுரங்கம் ஒன்றில் பாறை சரிந்து விழுந்த அசம்பாவிதத்தில் மாண்டோர் எண்ணிக்கை குறைந்தது 17க்கு அதிகரித்துள்ளது.
மேற்கு ஜாவாவில் நேர்ந்த இச்சம்பவத்தில் குறைந்தது அறுவர் காயமுற்றனர். தேடல், மீட்பு அமைப்பான பசார்னாஸ் இத்தகவல்களை வெளியிட்டது.
இச்சம்பவம் சிரேபோன் நகரில் நேர்ந்தது. அசம்பாவிதம் ஏற்பட்ட பகுதி ஊழியர்கள் நலன் கருதி நடப்பில் இருக்கும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று மேற்கு ஜாவா ஆளுநர் டெடி முல்யாடி இன்ஸ்டகிராமில் பதிவிட்டார்.
பாறை சரிந்து விழுந்ததற்கான காரணத்தை அறிய தாங்கள் விசாரணை நடத்தப்போவதாக இந்தோனீசிய எரிசக்தி, கனிம வளங்கள் அமைச்சு அறிக்கையில் தெரிவித்தது. மேலும் நிலச்சரிவு ஏற்படும் சாத்தியம் உள்ளதா என்பதை அறிய சோதனை நடத்தப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
சம்பவம் நிகழ்ந்த பகுதி, மணல் நகரும் சாத்தியம் அதிகம் உள்ள பகுதியாகும். குறிப்பாக வழக்கத்துக்கு மாறாக மழை பொழியும் வேளைகளுக்கு அது பொருந்தும்.
சம்பவம் நேர்ந்த இடத்தில் உள்ள மேடான பகுதிகள், வானிலை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மீட்புப் பணிகளை கவனமாக மேற்கொள்ளுமாறு எரிசக்தி, கனிம வளங்கள் அமைச்சின் நிலவியல் அமைப்புத் தலைவர் முகம்மது வாஃபிட் கேட்டுக்கொண்டுள்ளார்.

