ஜகார்த்தா: ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டு, சமரசப் பேச்சு நடத்த முன்வந்துள்ள இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் முயற்சிக்குப் பாகிஸ்தான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் உள்ளிட்ட பல மத்திய கிழக்கு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பிரபோவோவின் பயணம், இந்தோனீசியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு உட்பட்டது என்று வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) உறுதிப்படுத்தினார்.
அமைதிக்கும் மோதல் பரவாமல் தடுப்பதற்கும் முன்னெடுக்கப்படும் இந்தச் சமரசத் திட்டம், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே செயல்படுத்தப்படும். எனினும், பிரபோவோவின் சமரசப் பேச்சுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது குறித்த தகவல் இல்லை.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் தீவிரமடைவதைத் தடுக்கப் பல முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து செயல்பட பிரபோவோ ஆர்வம் காட்டி வருவதாக இந்தோனீசிய அமைச்சர் நஸ்ரோன் வாஹித் வெள்ளிக்கிழமை (மார்ச் 5) தெரிவித்தார்.
ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற நோன்பு துறப்பு விருந்தின்போது, இந்த விவகாரம் குறித்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
எனினும், காஸா பகுதிக்கு அமைதிப்படையை அனுப்பும் அதிபரின் முடிவிற்கு இந்தோனீசியாவின் செல்வாக்குமிக்க உலமா சபை (MUI) போன்ற அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
பாலஸ்தீனத்தின் சுதந்திரத்திற்குப் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில், அமைதி முயற்சியில் இருந்து இந்தோனீசியா விலகும் என அதிபர் உறுதியளித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், உலகளாவிய ஒருமைப்பாட்டைப் பேணவும் அமைதியை நிலைநாட்டவும் ஜகார்த்தா தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்பச் செயல்பட வெளியுறவு அமைச்சகம் முழுத் தயார் நிலையில் உள்ளது.

