ஜகார்த்தா: இந்தோனீசியாவின் புதிய தகவல் தொடர்பு அமைச்சராக புடி ஆரி செட்டியாடி நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அதிபர் ஜோக்கோ விடோடோ திங்கட்கிழமை வெளியிட்டார். 2024 பொதுத் தேர்தலைக் கருத்தில்கொண்டு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் கிராமங்கள், பின்தங்கிய பகுதிகளின் மேம்பாட்டுத் துறை துணையமைச்சராக திரு புடி பதவி வகித்தார். மேலும், அவர் 2014ஆம் ஆண்டிலிருந்து தன்னார்வத் தொண்டு நிறுவனமான புரோஜோவைத் தலைமையேற்று நடத்தி வருகிறார். அந்த தொண்டு நிறுவனம் அதிபர் ஜோக்கோவி ஆதரவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அமைச்சரவை மாற்றம் பல துணையமைச்சர்களின் நியமனத்தையும் உள்ளடக்கியது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, அதிபர் தனது ஆதரவாளர்களை நிர்வாகத்தில் அமர்த்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
அதிபரின் இரண்டாவது தவணைக்காலம் 2024ஆம் ஆண்டு முடிவடைவதால், அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.