ஜகார்த்தா: போதைப் புழக்கத்திற்கு அடிமையாகி போதைப் பித்தர்களாக உருமாறி வருவோரின் எண்ணிக்கை பேரளவு அதிகரித்துள்ளதால் இந்தோனீசியாவின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு அமைப்பு (பிஎன்என்) மின்சிகரெட் உள்ளிட்டவற்றிற்கு முற்றாக தடைவிதிக்க வலியுறுத்தியுள்ளது.
மின்னணுக் கருவிகளில் சட்டவிரோதப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் எதிரொலியாக, மின்சிகரெட், அதனைப் புகைக்க உதவும் சாதனங்கள் உள்ளிட்டவற்றின் விநியோகத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது அந்த அமைப்பு.
கடந்த சில மாதங்களாக பரிசோதிக்கப்பட்ட 341 மின்சிகரெட் திரவ மாதிரிகளில், குறைந்தது 11 மாதிரிகளில் செயற்கை கஞ்சா அல்லது கஞ்சாவில் பொதுவாகக் காணப்படும் ரசாயனக் கலவைகள் இருப்பது கண்டறியப்பட்டதாக ‘பிஎன்என்’ தலைமை அதிகாரி சுயூதி அரியோ செட்டோ தெரிவித்தார்.
எட்டோமிடேட் கொண்ட 23 மாதிரிகளையும், மெத்தம்ஃபெட்டமைன் கலந்திருந்த மற்றொரு மாதிரியையும் போதைப்பொருள் ஒழிப்பு அமைப்பு கண்டுபிடித்தது.
ஜகார்த்தாவில் ‘பிஎன்என்’ நடத்திய கலந்துரையாடலில் பேசிய திரு சுயூதி, “அமைப்பு கைப்பற்றிய இந்தக் கண்டுபிடிப்புகளில், மனிதர்களின் முக்கிய நரம்பு மண்டலத்தில் கடுமையான தீங்கு விளைவிக்கும் இருவகைப் போதைப்பொருள்களால் மின்சிகரெட் திரவங்கள் செலுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது,’’ என்றார்.
அங்கு நடப்பில் உள்ள விதிமுறைகளின்படி, பரவலான பொது நுகர்வுக்கு ஏற்புடையதல்ல என்று முதலாம் வகையைச் சார்ந்த போதைப்பொருள்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
மேலும், அவை போதைப் புழங்கிகளை தீவிரமாக அடிமையாக்கும் வாய்ப்பு மிக அதிகமாக இருப்பதால் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே அவற்றைப் பயன்படுத்த முடியும் என்றும் விளக்கினார்.
ஜனவரி மாதத்தில் தெற்கு ஜகார்த்தாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் மறைமுகமாக இயங்கி வந்த போதைப்பொருள் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ‘பிஎன்என்’ அதிகாரிகள் மது போத்தல் ஒன்றில் 5 லிட்டர் எட்டோமிடேட் திரவத்தைக் கண்டுபிடித்தனர், இது மின்சிகரெட் திரவக் குப்பிகளில் செலுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, கஞ்சா பொருள்களுக்கு வெவ்வேறு வடிவம் கொடுத்து மக்களிடையே புழக்கத்தில் விடுவது சமூகத்தை பேரளவில் பாதிக்கும் என்று அக்கறை தெரிவித்துள்ளது தேசிய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு.
போதை வஸ்துக்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த விநியோகம், பயன்பாடு என்று அனைத்திலும் தடை விதிக்க வேண்டும், அவற்றை சட்டத்துக்குப் புறம்பானது என்று உடனடி ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் ‘பிஎன்என்’ அறைகூவல் விடுத்துள்ளது.

