ஜகார்த்தா: உலக அளவில் பனை எண்ணெய் விலையை பாதிக்கும் என்று அஞ்சப்படும் வகையில், இந்தோனீசிய காடுகளில் சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் செம்பனைத் தோட்டங்களை அந்நாட்டு அரசாங்கம் இவ்வாண்டு கைப்பற்றவுள்ளது.
இதனை மேற்கு ஜாவா மாநிலத்தில் புதன்கிழமை (ஜனவரி 7) நடந்த தேசிய அறுவடை நிகழ்ச்சியில் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, கலந்துகொண்டு விவசாயிகளிடம் கூறியுள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டு, இந்தோனீசிய அரசாங்கம், அதன் ராணுவம், காவல்துறை, அரசாங்க வழக்கறிஞர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து 4.1 மில்லியன் ஹெக்டர் அளவு பனை விளை நிலங்களை தன்வசப்படுத்திக்கொண்டது.
அவ்வாறு இந்தோனீசியக் காடுகளில் இயங்கிய உரிமமற்ற செம்பனைத் தோட்டங்களில் சிறிய முதலீடு செய்த விவசாயிகளின் நிலங்களும், பெரிய நிறுவனங்களின் இடங்களும் அதிகாரிகளால் குறிவைத்து பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல இவ்வாண்டும் மேலும் நான்கு அல்லது ஐந்து மில்லியன் ஹெக்டர் பனைமரத் தோட்டங்களைக் கைப்பற்றப்போவதாக அதிபர் பிரபோவோ சுபியாந்தோ அந்த அறுவடை நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
மொத்தம் 16.8 மில்லியன் ஹெக்டர் அளவு செம்பனைத் தோட்டங்களைக் கொண்ட இந்தோனீசியா உலகிலேயே ஆக அதிக அளவில் பனை எண்ணெய்யை உற்பத்தி செய்கிறது.
கடந்த ஆண்டில் கைப்பற்றப்பட்ட பனை விளைநிலங்களை நடத்திய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதங்களின் மூலம் அரசாங்கத்துக்கு S$8.33 பில்லியன் (US$6.5 பில்லியன்) கிடைக்கும் என்று இந்தோனீசிய தலைமைச் சட்ட அதிகாரி சனிடார் புர்ஹனுடின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025ஆம் ஆண்டில் ராணுவத்தின் ஆதரவுடன் அரசாங்கம் பனை எண்ணெய்த் துறையில் அதன் கவனத்தை வைத்து, உரிமமற்ற நிலங்களைக் கைப்பற்றத் தொடங்கியது.
தொடர்புடைய செய்திகள்
அதன்விளைவால் அவ்வகை எண்ணெய்யின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதன் விலையில் தாக்கம் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

