ஜகார்த்தா: டான்சேனியாவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கப்பலில் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் 2.6 டன் அளவிலான திரவ மெத்தம்ஃபிட்டமின் போதைப்பொருளை இந்தோனீசியா பறிமுதல் செய்துள்ளது.
இது, இந்தோனீசியாவின் ஆகப் பெரிய போதைப்பொருள் முறியடிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும். இந்த முறியடிப்பு நடவடிக்கையில் 10 கப்பல் ஊழியர்கள் கைது செய்யப்பட்டதாக மூத்த போதைப்பொருள் தடுப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.
மலேசியாவின் சரவாக் மாநிலத்திலிருந்து அந்தமான் கடல் வழியாக வந்த கப்பல் இந்தோனீசியாவுக்குள் போதைப்பொருளைக் கடத்தி வரக்கூடும் என்று தங்களுக்கு உளவுத்துறைத் தகவல் கிடைத்ததாக இந்தோனீசியாவின் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு அமைப்பு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) அறிக்கை மூலம் தெரிவித்தது.
அந்த அமைப்பு சுங்கத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் எம்வி ரெய்ன் மேக்கர் எனும் கப்பலை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) பின்னிரவில் ரியாவ் மாநிலத்தின் பெங்காலிஸ் பகுதிக்கு அருகே தடுத்தது. அக்கப்பல் போலியான பெயரில் பயணம் செய்துகொண்டிருந்தது.
அந்தக் கப்பலில் எட்டு தண்ணீர்ப் பீப்பாய்கள், நீர்த் தொட்டி ஆகியவற்றில் 2.6 டன் அளவு மெத்தம்ஃபிட்டமின் வைக்கப்பட்டிருந்ததாக போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், கப்பலில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத சிகரெட்டுகள் இருந்ததை மோப்ப நாய்கள் கண்டுபிடித்ததாகவும் அமைப்பு குறிப்பிட்டது.


