இந்தோனீசியா, இலங்கை வெள்ள நிலவரம்: உதவிக்காகக் காத்திருக்கும் மக்கள்

2 mins read
e4ae6b72-ff53-448b-9176-d4505dddecfc
பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ள இந்தோனீசிய மக்கள் போதுமான உணவும் குடிக்கத் தண்ணீரும் இல்லாமல் தடுமாறுகின்றனர். - படம்: ஏஎஃப்பி

கொழும்பு: இந்தோனீசியா, இலங்கை நாடுகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் அந்தந்த நாட்டு அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

ஒரே நேரத்தில் பருவமழையும் சூறாவளியும் வந்ததால் இலங்கை, இந்தோனீசியாவின் சுமத்ரா, தாய்லாந்தின் தென்பகுதி, மலேசியாவின் வடக்குப் பகுதி ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்த நான்கு நாடுகளில் மட்டும் 1,450க்கும் அதிகமானவர்கள் மாண்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், நிவாரண உதவிகள் கிடைப்பதில் தாமதத்தை எதிர்நோக்குவதாக இந்தோனீசிய மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் உணவும் குடிக்கத் தண்ணீரும் இல்லாமல் மக்கள் தடுமாறுகின்றனர்.

வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் உதவிப்பொருள்களைக் கொண்டு சேர்ப்பதில் சிரமங்கள் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

புதன்கிழமை (டிசம்பர் 3) நிலவரப்படி அண்மைய வெள்ளத்தால் இந்தோனீசியாவில் மட்டும் 804 பேர் மாண்டனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் 650க்கும் மேல் உயர்ந்துள்ளது.

தவிக்கும் இலங்கை

இலங்கையில் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகி வருகிறது. டித்வா புயலால் இதுவரை 465 பேர் மாண்டனர். கிட்டத்தட்ட 370 பேரைக் காணவில்லை

புயல் காரணமாக 9 பில்லியன் வெள்ளி மதிப்பிலான கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பக் கிட்டத்தட்ட 10 பில்லியன் வெள்ளி நிதி உதவி தேவைப்படுவதாக இலங்கை தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சரிசெய்ய 25,000 இலங்கை ரூபாய் (106 வெள்ளி) வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு 10,300 வெள்ளி வரையிலான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 200,000க்கும் அதிகமானவர்கள் அரசாங்க முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதற்கிடையே சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்கத் தொடங்கியுள்ளது. டிசம்பர் 2ஆம் தேதி கொழும்பு துறைமுகத்திற்கு ஒரு சொகுசுக் கப்பல்மூலம் சுற்றுலாப் பயணிகள் சென்றனர்.

குறிப்புச் சொற்கள்