பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டும் அடங்காத ஆர்ப்பாட்டங்கள்

2 mins read
29e04625-dff0-40d0-a569-aae6529eaa25
பாதுகாப்புப் படையினருடன் மோதிய ஆர்ப்பாட்டக்காரர்கள். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் தலைவிரித்தாடும் ஆர்ப்பாட்டங்களை முறியடிக்க அந்நாட்டு அரசாங்கம் பாதுகாப்பை பலப்படுத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அடங்குவதாக இல்லை.

அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அவர்களை முறியடிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 31) நாடாளுமன்றக் கட்டடத்தைப் பாதுகாக்க, கட்டடத்துக்குக் கவசங்களுடனான கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் காவல்துறை அனுப்பிவைத்தது.

இந்தோனீசியாவெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டபோதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுவதாக இல்லை. திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 1) ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

குறைந்தது 300 பல்கலைக்கழக மாணவர்கள் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே பதாகைகளை ஏந்திக்கொண்டு அரசாங்கத்துக்கு எதிராக முழக்கமிட்டனர்.

கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இதுவரை குறைந்தது ஆறு பேர் மாண்டுவிட்டனர்.

இந்தோனீசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஏற்கெனவே பொருளியல் ரீதியாகக் கடும் சவால்களை எதிர்கொண்டு வரும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

ஆர்ப்பாட்டங்கள் முதலில் அமைதியான முறையில் நடத்தப்பட்டன. ஆனால் ஆகஸ்ட் 28ஆம் தேதி இரவில் 21 வயது விநியோக ஓட்டுநர் ஒருவரின் மரணத்துக்கு இந்தோனீசிய அதிகாரிகள் காரணமாக இருப்பதைக் காட்டும் காணொளி வலம் வந்ததை அடுத்து வன்முறை வெடித்தது.

விநியோக ஓட்டுநரின் மரணம் தொடர்பாக ஏழு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படுவதாக இந்தோனீசிய அரசாங்கம் தெரிவித்தது.

முதலில் தலைநகர் ஜகார்த்தாவில் மட்டுமே ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது யோக்யகார்த்தா, பண்டோங், செமாராங், சுரபாயா, மேடான் போன்ற முக்கிய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள பல இடங்களில் காவல்துறையினர் சோதனைச்சாவடிகளை அமைத்துள்ளனர்.சாலைகளில் அதிகாரிகள் சுற்றுக்காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக ராணுவமும் காவல்துறையும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று இந்தோனீசிய நிதி அமைச்சரின் வீட்டுக்குள் சிலர் அத்துமீறி நுழைந்து கொள்ளையடித்ததை அடுத்து, அவருக்கு மிகவும் நெருக்கமான தற்காப்பு அமைச்சர் ஸ்ஜாஃப்ரி சம்சுதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய காவல்துறைத் தலைமையகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. அங்கும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஜகார்த்தாவில் உள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்குக் குறைந்தது செப்டம்பர் 2ஆம் தேதி வரை இணையம் வழி பாடம் கற்பிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்