கோலாலம்பூர்: அதிக அபாயமுள்ள இணையத்தளங்களை குறைந்த வயதுப் பிள்ளைகள் பயன்படுத்துவதிலிருந்து தடைசெய்ய இந்தோனீசிய மேற்கொண்ட முயற்சியை மலேசியா ஆதரிப்பதாக அந்நாட்டுத் தொடர்பு அமைச்சர் ஃபாமி ஃபட்சில் கூறியுள்ளார்.
பாதுகாப்பான இணையத்தளங்களை மக்கள் அணுகுவதை உறுதிசெய்ய இந்தோனீசியாவும் மலேசியாவும் மேற்கொள்ளும் கலந்துரையாடல்களுடன் அது ஒத்துப்போவதாகத் திரு ஃபாமி சொன்னார்.
“நம் நாட்டு மக்களுக்கு, குறிப்பாகப் பிள்ளைகளின் பயன்பாட்டுக்கு இணையப் பாதுகாப்பை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து நானும் இந்தோனீசியத் தொடர்பு அமைச்சர் இபு மியூடியா ஹஃபீதும் நீண்டகாலம் கலந்துரையாடி வருகிறோம்,” என்றார் அவர்.
இந்தோனீசிய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையை வரவேற்ற திரு ஃபாமி, அந்நாட்டிற்குப் பயனளிக்கும் வகையிலான அனுபவங்களையும் உத்திகளையும் பகிர்ந்துகொள்ள மலேசியா தயாராக இருக்கிறது என்றும் சொன்னார்.
இந்தோனீசியாவில் 16 வயதுக்குக்கீழ் உள்ள பிள்ளைகளின் சமூக ஊடகக் கணக்குகள் கட்டங்கட்டமாக முடக்கப்படும் என்று திருவாட்டி மியூடியா ஜனவரியில் அறிவித்தார்.
யூடியூப், டிக்டாக், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், திரெட்ஸ், எக்ஸ் ஆகிய பல்வேறு சமூக ஊடகங்களில் உள்ள கணக்குகள் அவற்றுள் அடங்கும் என்றார் திருவாட்டி மியூடியா.
இதற்கிடையே, ஆசியான் உறுப்பு நாடுகளின் ஒப்புதலுடன் கடந்த ஆண்டிலிருந்து வட்டார அளவில் மின்னிலக்கப் பாதுகாப்பு குறித்த ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டு இருப்பதாகத் திரு ஃபாமி குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பாதுகாப்பான சமூக ஊடகத்தை உருவாக்குவதற்கான மலேசியாவின் தீர்மானத்தைத் தொடர்பு அமைச்சர்கள் அங்கீகரித்ததை அவர் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வோர் ஆசியான் நாடும் பயனர் பாதுகாப்பை எப்படி வலுப்படுத்துவது என்பது குறித்து ஆராயவேண்டும் என்பதைத் தென்கிழக்காசிய நாடுகளின் தொடர்பு அமைச்சர்கள் ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.
அனைத்துத் தென்கிழக்காசிய நாடுகளும் உடனடியாகக் கட்டுப்பாடுகளை விதிக்க முன்வராவிட்டாலும் இந்தோனீசியா அத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது ஒரு முதல்படி என்று திரு ஃபாமி குறிப்பிட்டார்.

