முதலீட்டாளர்களை ஈர்க்க இந்தோனீசியா திணறல்

முதலீட்டாளர்களை ஈர்க்க இந்தோனீசியா திணறல்

2 mins read
92a0813d-7be5-4227-a390-25ad1482b49d
அமெரிக்க டாலருக்கு 18,100 ரூப்பியா என்ற அளவிற்குக் கடந்த வாரம் இந்தோனீசிய நாணயத்தின் மதிப்பு சரிந்தது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: எரிபொருள் விலையேற்றம் காரணமாக இந்தோனீசியப் பொருளியல் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளது.

அதன் நாணய மதிப்பு சற்று மீண்டுள்ள போதிலும், அரசின் கொள்கைகள் முதலீட்டாளர்களைக் கவலையடையச் செய்துள்ளன.

கச்சா எண்ணெய்க்கு இந்தோனீசியா இறக்குமதியையே பெரிதும் சார்ந்துள்ளது. இந்நிலையில், மத்திய கிழக்குப் போரால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தோனீசியாவைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

இருப்பினும், எரிபொருள் மானியங்களையும் செலவுமிக்க இலவசப் பள்ளி உணவுத் திட்டத்தையும் அந்நாட்டு அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது.

அதே வேளையில் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளும் மத்திய வங்கியின் சுதந்திரமான செயல்பாடுகள் மீதான நாடாளுமன்றத்தின் தலையீடுகளும் முதலீட்டாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.

இதனால், ரூப்பியா நாணய மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்ததுடன், இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து அதன் பங்குச்சந்தையும் தன் மதிப்பில் மூன்றில் ஒரு பகுதியை இழந்துள்ளது.

வட்டி விகிதத்தை மத்திய வங்கி 75 புள்ளிகள் உயர்த்தியதைத் தொடர்ந்து சந்தை சற்று மீண்டாலும் கொள்கை சார்ந்த கவலைகள் நீடிக்கின்றன.

“உள்நாட்டுக் கொள்கை குறித்த முதலீட்டாளர்களின் கவலைகள் இன்னும் தீர்க்கப்படாததால் ரூப்பியா மீதான சரிவு அழுத்தம் தொடரும் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று ‘பிஎம்ஐ’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

9% பொருளியல் வளர்ச்சிக்கு இலக்கு

வரும் 2029ஆம் ஆண்டிற்குள் பொருளியல் வளர்ச்சியை ஒன்பது விழுக்காடாக உயர்த்த இந்தோனீசியா இலக்கு கொண்டுள்ளது.

“2045க்குள் நாம் ஒரு பணக்கார நாடாக மாற வேண்டும் என்றால், நமது வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். இல்லையெனில், நாம் நடுத்தர வருவாய் ஈட்டும் நாடுகளின் குழுவிலேயே சிக்கிக்கொள்வோம்,” என்று நிதித் துணையமைச்சர் ஜுடா அகுங் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், “நாணய மதிப்பை வலுவான நிலையில் வைக்க, அதிபர் பிரபோவோ தலைமையிலான அரசு தனது மக்கள் விருப்ப மற்றும் தலையீட்டுக் கொள்கைகளிலிருந்து மாற வேண்டும். அத்துடன், முதலீட்டாளர்களுக்கு உகந்த கொள்கை உருவாக்கத்தை நோக்கிய தெளிவான மாற்றமும் தேவை,” என்று ‘கேப்பிட்டல் எக்கனாமிக்ஸ்’ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, இந்தோனீசியாவின் வளர்ச்சி ஐந்து விழுக்காட்டிற்குமேல் இருக்காது என்று உலக வங்கியும் கணித்துள்ளது.

நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்க கடப்பாடு கொண்டுள்ளோம் என்பதை முதலீட்டாளர்களுக்குக் காட்ட, அரசாங்கம் தனது செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்று ஜகார்த்தாவைத் தளமாகக் கொண்ட உத்திசார், அனைத்துலக ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் டெனி ஃபிரியாவன் வலியுறுத்தி இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்