புகைமூட்டத்தைக் கையாள இந்தோனீசியா தீவிர நடவடிக்கை

புகைமூட்டத்தைக் கையாள இந்தோனீசியா தீவிர நடவடிக்கை

2 mins read
39d01a80-974c-4fef-8e11-1695159468c2
சிங்கப்பூரில் அவ்வப்போது புகைமூட்டத்தின் தாக்கம் ஏற்படக்கூடும் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) எச்சரித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கோலாலம்பூர்: புகைமூட்டப் பிரச்சினையைக் கட்டுப்படுத்தும் கூட்டுமுயற்சியின் ஒரு பகுதியாக, தனது வான்வெளியில் நுழைய மலேசிய அமைப்புகளுக்கு இந்தோனீசியா அதிகாரபூர்வ அனுமதி வழங்கியிருக்கிறது.

செயற்கை மழையை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தோனீசியா அந்த அனுமதியைக் கொடுத்திருப்பதாக மலேசியாவின் இயற்கைவள, சுற்றுப்புற நிலைத்தன்மை அமைச்சர் ஆர்தர் ஜோசஃப் குருப் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) தெரிவித்தார்.

தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பும் வானிலை ஆய்வகமும் எல்லைப் பகுதிகளில் அத்தகைய நடவடிக்கைகளுக்கான அட்டவணைகளைத் தயாரித்து வருவதாக அவர் சொன்னார். இந்தோனீசிய ராணுவத்துடன் ஒருங்கிணைந்து அந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திரு குருப் கூறினார்.

காட்டுத்தீயாலும் நிலப்பரப்பில் உண்டாகும் தீச்சம்பவங்களாலும் ஏற்பட்ட புகைமூட்டம், மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் பல பள்ளிகள் மூடப்படுவதற்குக் காரணமானது. இதனையடுத்து, நெருப்பு பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை இந்தோனீசியா தீவிரப்படுத்தியுள்ளது.

தீயை அணைப்பதில் இந்தோனீசியாவுக்கு உதவ மலேசியா தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்ட கோரிக்கை ஏதேனும் இருந்தால் அது அமைச்சரவையின் பரிசீலனைக்குக் கொண்டுசெல்லப்படும் என்றும் மலேசிய அமைச்சர் தெரிவித்தார்.

மலேசிய தினம் செப்டம்பர் 16ஆம் தேதி சரவாக்கில் கொண்டாடப்படவுள்ள நிலையில், இரு நாடுகளும் தீயணைப்பு, தீத்தடுப்புத் திட்டங்களை விரிவுபடுத்தவுள்ளன.

இந்தோனீசியாவின் கலிமந்தான் எல்லையை ஒட்டியுள்ள சரவாக் மாநிலம் புகைமூட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மலேசியச் சுற்றுப்புறத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, சரவாக்கின் ஆறு மாவட்டங்களிலும் மலேசியத் தீபகற்பத்தின் நான்கு மாநிலங்களின் எட்டு மாவட்டங்களிலும் ஆரோக்கியமற்ற காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, சிங்கப்பூரில் அவ்வப்போது புகைமூட்டத்தின் தாக்கம் ஏற்படக்கூடும் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) எச்சரித்துள்ளது. வார இறுதியில் காட்டுத்தீச் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“வார இறுதியில் காட்டுத்தீச் சம்பவங்களும் புகைமூட்டமும் அதிகரித்திருப்பதைப் பார்த்தோம். முக்கியமாக, கலிமந்தான், சுமாத்ராவின் தென்பகுதிகளில் அவை கண்டறியப்பட்டன,” என்று வாரியம் ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

ஒட்டுமொத்தக் காற்றின் தரத்தை அணுக்கமாய்க் கண்காணித்து வருவதாகக் கூறிய வாரியம், காற்றின் தரம் மோசமடைந்தால் தேவையான ஆலோசனைகளை வழங்கவிருப்பதாகக் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
இந்தோனீசியாபுகைமூட்டம்மழைவான்வெளிமலேசியா