ஜகார்த்தா: இந்தோனீசியா, வழக்கத்திற்கு மாறான வருவாய்ப் பற்றாக்குறையைக் கையாளப் புதிய வழிகளை நாடுகிறது. வரிகளிலிருந்து கூடுதல் வருமானத்தை ஈட்ட அது பணக்காரர்களையும் பெரிய நிறுவனங்களையும் குறிவைக்கிறது.
இந்தோனீசியாவின் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று விழுக்காட்டை எட்டும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணக்காரர்களை அதிகாரிகள் குறிவைத்துள்ளனர். வருமானத்தை மறுஆய்வு செய்ய வருமாறு சிலருக்கு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
உள்ளூர்ச் செல்வந்தர்கள் நடத்தும் பெரிய நிறுவனங்களை இவ்வாண்டுக்கான வரி நிலுவைகளைச் செலுத்துமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சில குடும்ப நிறுவனங்களிடம் 5 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் (S$6.47 மில்லியன்) செலுத்தும்படி கூறப்பட்டுள்ளது.
சில நிறுவனங்கள் அதனை ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, கோரப்பட்ட தொகையில் குறைந்தது 30 விழுக்காட்டையாவது கொடுக்குமாறு வரித் துறை அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது. கட்டவேண்டிய தொகை எப்படி எட்டப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்த அதிகாரிகள் மறுத்துவிட்டதாகச் சிலர் கூறினர்.
வரிமூலம் கிடைக்கும் வருவாய், வழக்கத்தைவிட இவ்வாண்டு குறைவாய் இருப்பதாகக் கடந்த வாரம் இந்தோனீசிய நிதியமைச்சின் தரவுகளில் தெரியவந்தது. நவம்பர் மாதம் வரையிலான வருவாய், ஆண்டு முழுமைக்குமான இலக்கில் 79 விழுக்காட்டை எட்டியிருந்தது. சென்ற ஆண்டு அது கிட்டத்தட்ட 90 விழுக்காடாக இருந்தது.
2021, 2022, 2023ஆம் ஆண்டுகளில் வரியிலிருந்து திரட்டப்பட்ட வருவாய் வருடாந்தர இலக்கிற்கும் அதிகமாக இருந்தது.

