இந்தோனீசியா: அரசாங்க உயர்நிலை வழக்கறிஞர் பதவி விலகல்

இந்தோனீசியா: அரசாங்க உயர்நிலை வழக்கறிஞர் பதவி விலகல்

2 mins read
7b8f76ea-9262-43eb-8895-1e140d314f9c
பதவி விலகும்வரை திரு பெப்ரி ஏட்ரியன்சியா, அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் இலவச உணவுத் திட்டத்தை நடத்தும் தேசிய ஊட்டச்சத்து அமைப்பில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது தொடர்பான விசாரணையை மேற்பார்வையிட்டார். - படம்: இபிஏ

ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் குற்றவியல் சிறப்புப் பிரிவுக் கண்காணிப்பாளர் ஃபெப்ரி ஏட்ரியான்சியா பதவி விலகியுள்ளார். அந்நாட்டுக் காவல்துறை அவரது இல்லம் உட்பட பன்னிரண்டு இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து சனிக்கிழமை (ஜூலை 11) அவரது பதவி விலகல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இதன் தொடர்பில் சாட்சிகள் 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. காவல்துறைச் சோதனையின்போது அவரது வீட்டிலிருந்து 74 கிலோ தங்கக் கட்டிகளும் பல்வேறு நாடுகளின் நாணயங்களில் கிட்டத்தட்ட 20 மில்லியன் அமெரிக்க டாலர் (S$25.9 மில்லியன்) மதிப்புள்ள ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தோனீசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, சவூதி அரேபியா போன்ற நாடுகளின் நாணயங்கள் அவற்றில் அடங்கும்.

விசாரணை குறித்துக் காவல்துறை விளக்கமாகக் கூறவில்லை. திரு பெப்ரி மீதான குற்றச்சாட்டுகளையும் அது விவரிக்கவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெறுவதை அது சுட்டியது.

முன்னதாக, அரசாங்க முதலீட்டு நிறுவனங்களில் லஞ்சம், ஊழல், அண்மைய மின்தடைகளுக்குக் காரணமான நிலக்கரிக் கொள்முதல் விவகாரம் ஆகியவை தொடர்பான விசாரணையின் ஓர் அங்கமாகச் சோதனை நடத்தப்படுவதாகக் காவல்துறை கூறியிருந்தது.

பதவி விலகுவதற்குமுன் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய திரு பெப்ரி தாம் தவறு ஏதும் செய்யவில்லை என்று மறுத்தார். இருப்பினும், சட்ட நடைமுறையின் நடுநிலைமையைப் பேணவே தாம் பதவி விலகுவதாக அவர் கூறினார்.

பதவி விலகும்வரை அவர், இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் இலவச உணவுத் திட்டத்தை நடத்தும் தேசிய ஊட்டச்சத்து அமைப்பில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது தொடர்பான விசாரணையை மேற்பார்வையிட்டார்.

குறிப்புச் சொற்கள்
இந்தோனீசியாஅரசாங்கம்வழக்கறிஞர்ஊழல்பதவி விலகல்