இந்தோனீசியாவில் எரிமலை வெடிப்பு: இயல்புநிலை பாதிப்பு, சிரமங்கள் நீடிப்பு

இந்தோனீசியாவில் எரிமலை வெடிப்பு: இயல்புநிலை பாதிப்பு, சிரமங்கள் நீடிப்பு

2 mins read
d55344bf-a199-4790-b9f0-33ecb81a7742
சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) கருடா ஏர்லைன்ஸ் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு காணப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஜகார்த்தா: அனாக் கிரக்கத்தாவ் எரிமலை வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து, இந்தோனீசியா தனது முக்கிய அனைத்துலக விமான நிலையம் மற்றும் பிற ஏழு விமான நிலையங்களை மூடியதுடன் நூற்றுக்கணக்கான விமானச் சேவைகளையும் ரத்து செய்தது.

அதனால் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) ஏறத்தாழ 170,000 பயணிகள் தவிப்புக்குள்ளாகினர்.

ஜகார்த்தாவில் உள்ள பள்ளிக்கூடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை முதல் வகுப்புகள் இணையவழியாக நடத்தப்படும் என்று ஜகார்த்தா நகர நிர்வாகம் அறிவித்தது.

அனாக் கிரக்கத்தாவ் எரிமலை, ஜகார்த்தாவின் சோகர்னோ-ஹட்டா விமான நிலையத்திலிருந்து ஏறத்தாழ 180 கி.மீ. தொலைவில் உள்ளது.

அந்த விமான நிலையம், இந்தோனீசியாவின் அனைத்துலக மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான முக்கிய மையமாகத் திகழ்கிறது.

விமானச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடவடிக்கை தொடக்கத்தில், ஜகார்த்தா நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணி (சிங்கப்பூர் நேரப்படி காலை 6.30 மணி) வரை அமலில் இருந்தது. எனினும், அது பலமுறை நீட்டிக்கப்பட்டது.

அன்றைய தினம் அதிகாலை 1.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலான தரவுகளின்படி, மொத்தம் 301 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. சில சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், மேலும் பல விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டன.

அவற்றில் 233 உள்நாட்டு விமானச் சேவைகளும் 58 அனைத்துலக விமானச் சேவைகளும் 10 சரக்கு விமானச் சேவைகளும் அடங்கும்.

செப்டம்பர் 5, 6ஆம் தேதிகளில் சிங்கப்பூர் - ஜகார்த்தா இடையிலான 19 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

எரிமலையின் வெடிப்பு நிலவரம் அதிகரித்துள்ளதன் காரணமாக விமான நிலையச் செயல்பாடுகளுக்கான தடை திங்கட்கிழமை உள்ளூர் நேரம் காலை 8.59 மணி வரை நீட்டிக்கப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தனது இன்ஸ்டகிராம் பதிவில் தெரிவித்துள்ளது.

“மாறிவரும் வானிலை காரணமாக இந்த நிலைமை எப்போது முடிவுக்கு வரும் என்பதை எங்களால் உறுதியாகக் கூற முடியாது,” என்று இந்தோனீசியப் போக்குவரத்து அமைச்சர் டுடி புர்வாகாந்தி திங்கட்கிழமை (செப்டம்பர் 7) தமது அறிக்கையில் தெரிவித்தார்.

ஜகார்த்தாவிற்குச் சேவை வழங்கும் இரண்டு விமான நிலையங்கள் உட்பட இந்தோனீசியாவின் எட்டு விமான நிலையங்கள் செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலையில் மூடப்பட்டிருந்ததாக அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து, ஜகார்த்தாவின் முதன்மை விமான நிலையம் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மாலை 6 மணி (சிங்கப்பூர் நேரப்படி இரவு 7 மணி) வரை மூடப்பட்டிருக்கும் என்று அதன் நிர்வாகம் இன்ஸ்டகிராமில் தெரிவித்தது.

சனிக்கிழமையன்று அனாக் கிரக்கத்தாவ் எரிமலை வெடித்தபோது, ​​எரிமலைக் குழம்பு பீய்ச்சி அடிக்கப்பட்டது. அப்போது, பல நூறு கிலோமீட்டர் தூரம் வரை கேட்கக்கூடிய வகையிலான பெரும் சத்தம் எழுந்ததாகப் புவியியல் ஆய்வு நிறுவனம் ஒன்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்