மாஸ்கோ: தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ சந்தையை அடைவதற்கு இந்தோனீசியா ஒரு முதன்மை நுழைவாயிலாகச் செயல்படும் என்று அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக் நகரில் நடைபெற்ற கிழக்கத்திய பொருளியல் மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனை உறுதிபடக் கூறினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் நடத்திய இருதரப்புச் சந்திப்பில் பேசிய அதிபர் பிரபோவோ, அமைதிப் பெருங்கடலானது இரு நாடுகளின் பொருளியலையும் இணைக்கும் முக்கிய வணிகப் பாதையாக மாற்றப்பட வேண்டும் என்றார்.
ஏறத்தாழ 680 மில்லியன் பயனீட்டாளர்களைக் கொண்ட ஆசியான் வட்டாரத்தின் விரிவான வர்த்தகச் சந்தையைப் பயன்படுத்திக்கொள்ள ரஷ்ய நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
ரஷ்யாவிடமிருந்து கோதுமை, உரம், எரிசக்தி தொழில்நுட்ப வளங்கள் கிடைக்கும் நிலையில், இந்தோனீசியாவில் இருந்து பனை எண்ணெய், காப்பி, ரப்பர் ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் என்றும் இரு நாடுகளின் வணிகமும் ஒன்றோடொன்று துணைநிற்பவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
யூரேசியப் பொருளியல் ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ள நிலையில், நேரடி கப்பல், விமானப் போக்குவரத்து இணைப்புகளை அதிகரிக்கவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அணுசக்தி உற்பத்தி, எண்ணெய்-வாயு ஆய்வு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகளில் ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற இந்தோனீசியா தயாராக உள்ளது என்ற அதிபர் பிரபோவோ , ‘‘இந்த வர்த்தக உறவானது எந்தவொரு நாட்டின் ராணுவக் கூட்டமைப்புக்கும் எதிரானது அல்ல என்றும், வட்டார மக்களின் அமைதி, பொருளியல் வளம் சார்ந்த நடுநிலையான கொள்கையின் தொடர்ச்சியே,’’ என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.


