ஜகார்த்தா: எரிமலை வெடிப்பின் சாம்பல் ஓடுபாதையில் விழுந்ததன் காரணமாக சில நாள்கள் மூடப்பட்டிருந்த இந்தோனீசியாவின் பிரதான விமான நிலையமும் மேலும் சில விமானப் போக்குவரத்து மையங்களும் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டதாக அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
தலைநகர் ஜகார்த்தாவிற்குச் சேவை வழங்கும் விமான நிலையமும் மேலும் நான்கு விமான நிலையங்களும் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாக அமைச்சு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
“அனாக் கிரக்கத்தாவ் எரிமலை வெடிப்பின் தற்போதைய நிலையைத் தொடர்ந்து, சுகர்னோ-ஹத்தா அனைத்துலக விமான நிலையம் தனது விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது,” என்று அது அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதால், சிரமங்களில் சிக்கித் தத்தளித்த ஆயிரக்கணக்கான பயணிகளிடம் நிம்மதி திரும்பியுள்ளது. அவர்கள் தங்களது பயணத்தைத் தொடர்வதற்கான வரிசைகளைப் பிடிக்க அவர்கள் அவசரமாக ஓடியால் விமான நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
விமான நிலையங்களில் பல நாள்களாக நிலவிய குழப்பமான சூழலுக்குப் பிறகு, அவற்றில் சிக்கிய பயணிகள் அனைவரையும் விமானங்களில் ஏற்றி, அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பும் சவாலான பணியை விமான நிறுவனங்கள் தற்போது எதிர்கொண்டுள்ளன.
ஜகார்த்தாவில் இருந்து கிட்டத்தட்ட 150 கி.மீ தொலைவில் உள்ள அனாக் கிரக்கத்தாவ் எரிமலை சனிக்கிழமையன்று (செப்டம்பர் 5) வெடித்து, லாவாவையும் எரிமலைச் சாம்பலையும் கக்கியது.
விமான ஓடுபாதையில் எரிமலை வெடிப்புச் சாம்பல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து வார இறுதியில் எட்டு விமான நிலையங்கள் செயல்பாடுகளை நிறுத்தின.
அதனால் ஏறத்தாழ 3,000 விமானங்கள் பாதிக்கப்பட்டு, 3,40,000க்கும் மேற்பட்ட பயணிகள் தவிப்பிற்குள்ளானதாக போக்குவரத்து அமைச்சு திங்கட்கிழமை (செப்டம்பர் 7) தெரிவித்திருந்தது.


