விமானச் சீட்டுகளின் விலையை அதிகரிக்க இந்தோனீசிய விமானச் சங்கம் அழைப்பு

விமானச் சீட்டுகளின் விலையை அதிகரிக்க இந்தோனீசிய விமானச் சங்கம் அழைப்பு

1 mins read
விமான எரிபொருள் விலை லிட்டருக்கு $0.95லிருந்து $1.72க்கு உயர்வு
5b127846-0035-4042-985e-84a0f2c54dce
இந்தோனீசிய அரசுக்குச் சொந்தமான எரிசக்திப் பெருநிறுவனமான நிறுவனமான பெர்டாமினா எரிபொருள் விலையை 70 விழுக்காடு கூட்ட முடிவுசெய்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசிய அரசுக்குச் சொந்தமான எரிசக்திப் பெருநிறுவனமான பெர்டாமினா, உள்நாட்டு விமானங்களுக்கான எரிபொருள் விலையை 70 விழுக்காடு கூட்ட முடிவுசெய்துள்ளது.

இதையடுத்து, இந்தோனீசியச் தேசிய விமான நிறுவனங்கள் சங்கம் விமானங்களுக்கான எரிபொருளுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் விமானப் பயணச்சீட்டுக் கட்டண உச்சவரம்பை அதிகரிக்கவும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு முன்னர் சங்கம் விமானப் பயணச்சீட்டுகளுக்கான விலையையும் எரிபொருள் கட்டணத்தையும் 15 விழுக்காடு உயர்த்த அழைப்பு விடுத்திருந்தது.

மத்திய கிழக்கு நிலவரம் காரணமாக விமான எரிபொருளுக்கான விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது சங்கம் நினைத்ததைவிட விலை உயர்வு பலமடங்கு அதிகரித்துள்ளது.

உள்நாட்டு விமானச் சேவைகளுக்கான விமான எரிபொருள் விலை மார்ச் மாதத்தில் லிட்டருக்கு 13,656.51 இந்தோனீசிய ரூப்பியாவாக (S$1.03) இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் அது 23,551.08 இந்தோனீசிய ரூப்பியாவாக உயர்ந்துள்ளது. இது 72.45 விழுக்காட்டு விலை உயர்வாகும்.

உள்நாட்டு விமானச் சேவைகள்போல வெளிநாட்டுச் சேவைகளுக்கான எரிபொருள் விலையும் 80.32 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னர் வெளிநாட்டுச் சேவைகளுக்கான விமான எரிபொருள் விலை லிட்டருக்கு 0.95 வெள்ளியாக இருந்தது. தற்போது அது 1.72 வெள்ளியாகக் கூடியுள்ளது.

விமான எரிபொருள் விலை அதிகரிக்கும் நேரத்தில் அரசாங்கம் மானியம் கொடுத்தால் விமானப் பயணம் செய்யும் பொதுமக்களுக்குப் பெரிதாக பாதிப்பு இருக்காது என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்