ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஜாவா கடலில் பயணிகள் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விபத்து நடந்து நான்கு நாள்கள் ஆகியும் புதிய தகவல் எதுவும் கிடைக்காததால், காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் பெரும் தவிப்பிற்கும் ஏமாற்றத்திற்கும் ஆளாகியுள்ளனர்.
செப்டம்பர் 13ஆம் தேதி அதிகாலை ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ என்ற கப்பல், கிழக்கு ஜாவாவில் உள்ள சுரபயாவில் இருந்து தெற்கு கலிமந்தானில் உள்ள பஞ்சார்மாசின் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அதில் மொத்தம் 243 பேர் பயணம் செய்தனர். மோசமான வானிலை காரணமாக அந்தக் கப்பல் கடலில் கவிழ்ந்து மூழ்கியது.
அந்த விபத்தில் இதுவரை ஆறு பேர் மாண்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 108 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 129 பேரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.
காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் கடலோரக் காவல்படையினரும் கடற்படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், கடலில் இரண்டரை மீட்டர் உயரத்திற்கு ராட்சச அலைகள் சீறுவதாலும், பலத்த காற்று வீசுவதாலும் நீருக்கடியில் தேடும் பணியை மேற்கொள்ள முடியவில்லை என்று மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
தற்போது ஆறு கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் கடல் பரப்பில் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தனது தாயார் உட்பட ஏழு உறவினர்களைத் தேடும் ஃபவுசி, சகோதரருக்காகக் காத்திருக்கும் மரியா போன்ற பலர், உறுதியான தகவலுக்காகக் கண்ணீருடன் காத்துக்கிடக்கின்றனர்.
