ஜகார்த்தா: இந்தோனீசிய மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து திரு பெர்ரி வார்ஜியோ எதிர்பாராதவிதமாக விலகினார். அவரது பதவி விலகல் கடிதத்தை அதிபர் பிரபோவோ சுபியாந்தோ ஏற்றுக்கொண்டதாக அந்நாட்டு அரசாங்கம் திங்கட்கிழமை (ஜூலை 27) அறிவித்தது.
தனிப்பட்ட காரணங்களுக்காகத் திரு வார்ஜியோ பதவி விலகியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, வங்கியின் மூத்த துணைநிலை ஆளுநர் டெஸ்ட்ரி தமயந்தி இடைக்கால ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் நிதிச் சந்தைகள் திறக்கப்படுவதற்கு முன்பாக, உள்துறை விவகாரங்களில் அதிபர், துணை அதிபருக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பில் உள்ள அரசாங்கச் செயலக அமைச்சர் பிராசெதியோ ஹாதி இத்தகவலைச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தலைமைப் பொறுப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்ட போதிலும், மத்திய வங்கியின் அன்றாடச் செயல்பாடுகள் எவ்விதத் தடையுமின்றித் தொடரும் என்று இடைக்கால ஆளுநர் டெஸ்ட்ரி தமயந்தி உறுதிபடத் தெரிவித்தார்.
இந்தோனீசிய நாணயமான ரூப்பியாவின் மதிப்பு, பணப்பரிவர்த்தனை முறை, நாட்டின் நிதி நிலைத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் மத்திய வங்கி தொடர்ந்து கவனமுடன் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து, நல்லாட்சி நெறிமுறைகளைப் பின்பற்றி வங்கி தனது கடமைகளை நிறைவேற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் சட்ட நடைமுறைகளுக்கேற்ப, புதிய நிரந்தர ஆளுநரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திரு வார்ஜியோவின் பதவி விலகல், முதலீட்டாளர்கள் இடையே சற்றுக் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகச் சந்தைப் பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர். மத்திய வங்கியின் தன்னாட்சி, நாட்டின் நிதி மேலாண்மை குறித்து கவலை எழக்கூடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வர்த்தகத் தொடக்கத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூப்பியாவின் மதிப்பு 0.14 விழுக்காடு வரை சரிவு கண்டது. பங்குச் சந்தைக் குறியீடும் சரிவைச் சந்தித்தபோதிலும், பின்னர் அது மீட்சியடைந்தது.
கடந்த 2018ல் இந்தோனீசிய மத்திய வங்கியின் ஆளுநராகத் திரு வார்ஜியோ முதன்முறையாக நியமிக்கப்பட்டார். சிறப்பான செயல்பாட்டை அடுத்து, 2023ல் அவர் ஐந்தாண்டுத் தவணைக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் 2028 வரை இருந்த நிலையில், திரு வார்ஜியோ பதவி விலகியது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

