ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அமெரிக்க டாலருக்கு நிகரான அந்நாட்டு நாணயமான ரூப்பியாவின் சரிவு பேசுபொருளாகி உள்ளது.
சமூக ஊடகங்களில் இது குறித்த பதிவுகளும் கேலிக் காணொளிகளும் நிரம்பிவிட்டன.
ஒரு அமெரிக்க டாலர் இந்தோனீசியாவின் 17,600 ரூப்பியா என்ற நிலையை எட்டிவிட்டது. 1998ல் ஏற்பட்ட மிக மோசமான நிதி நெருக்கடியின்போது இந்தோனீசிய ரூப்பியா, அமெரிக்க டாலருக்கு நிகராக 16,800 என்று இருந்தது. எனவே தற்போதைய சரிவு வரலாற்று அளவையும் கடந்துவிட்டது என நிதி ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்தனர்.
நாணயச் சரிவை விளக்கும்படி, திங்கட்கிழமை (மே 18) இந்தோனீசிய மத்திய வங்கியின் ஆளுநர் பெரி வார்ஜியொ நாடாளுமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஒரு கட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், நிலைமைக்குப் பொறுப்பேற்று, ஆளுநரை பதவி விலகக் கோரினார்.
இந்தோனீசிய அதிபரின் கருத்து
இந்நிலையில், அதிபர் பிரபோவோ சுபியாந்தோவும் அவரின் அரசாங்கமும் இந்த விவகாரத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.
“கிராமப்புற மக்கள் எவரும் டாலரைப் பயன்படுத்துவதில்லை, நாட்டின் உணவு, எரிசக்தி நிலவரம் பாதுகாப்பாக உள்ளது. இந்தோனீசியாவின் பொருளாதார அடித்தளம் இன்னும் வலுவாகவே இருக்கிறது” என்று அதிபர் பிரபோவோ தெரிவித்தார்.
கிழக்கு ஜாவாவில் சனிக்கிழமை (மே 16) நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது நாணயச் சரிவு குறித்து இந்தோனீசிய அதிபர் அவரது கருத்தை வெளியிட்டார்.

