ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மனிதவளத் துணையமைச்சர் இமானுவெல் எபனிசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். எபனிசர் ஊழல் வழக்கொன்றில் சந்தேக நபராகப் பெயர் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து அதிபரின் உத்தரவு வந்துள்ளது.
திரு சுபியாந்தோவின் அமைச்சரவையில் இடம்பெற்ற ஒருவரிடம் ஊழலுக்கு எதிரான விசாரணை நடைபெறுவது இது முதன்முறை.
அரசாங்கச் செயலக அமைச்சர் பிரசத்தியோ ஹாடி வழக்கைப் பொறுத்தவரை சட்ட நடவடிக்கைகள் எவ்வாறு தொடரவேண்டுமோ அவ்வாறே நடக்கும் என்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கூறினார்.
வேலையிடப் பாதுகாப்புச் சான்றிதழ்களைப் பெற வந்தோரிடம் எபனிசர் மிரட்டிப் பணம் பறித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. உரிய தொகையைவிட 20 மடங்கிற்கும் மேல் அவர் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தோனீசியாவின் ஊழல் ஒழிப்பு அமைப்புத் தலைவர் சத்தியோ புடியாந்தோ வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அந்த விவரங்களை வெளியிட்டார்.
எபனிசர் சென்ற ஆண்டு (2024) டிசம்பரில் $238,000 கையூட்டுப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுவதாய்த் திரு புடியாந்தோ கூறினார்.
புதன்கிழமை (ஆகஸ்ட் 20) நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின்போது வேறு சிலருடன் அவர் பிடிபட்டார். மேல் விசாரணைக்காக எபனிசர் 20 நாள்களுக்குத் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஊழல் மோசடியில் தமக்குத் தொடர்பில்லை என்கிறார் எபனிசர். அதிபர் பொதுமன்னிப்பு வழங்குவார் என்று அவர் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
அதிபர் பிரபோவோவுக்கு இந்த விவகாரம் சோதனையாக அமைந்துள்ளது. சென்ற வாரம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஊழலைச் சகித்துக்கொள்ள முடியாது என்று அவர் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தங்களுக்குப் பேரிடியாய் அமைந்துள்ளதாக மனிதவள அமைச்சர் யாசியெர்லி தெரிவித்தார்.

