சுமத்ரா: இந்தோனீசியாவில் சென்ற வாரம் அலைக்கழித்த பெருவெள்ளத்தால் பலருக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.
காய்ச்சல், மூச்சுப் பிரச்சினை, வயிற்றுப்போக்கு, தோல் பிரச்சினை முதலியவற்றால் அவர்கள் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். அச்சே, வட சுமத்ரா, மேற்கு சுமத்ரா ஆகிய மாநிலங்களில் நோய் பரவுவதைத் தடுக்கவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியோரைப் பாதுகாக்கவும் அவர்கள் மும்முரமாக நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.
‘சென்யார்’ புயலால் சுமத்ராவின் வட பகுதி திடீர் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மூன்று மாநிலங்களிலும் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்டோர் அவதிக்குள்ளாயினர். மாண்டோர் எண்ணிக்கை 867க்குக் கூடியுள்ளது. இன்னும் ஐந்நூற்றுக்கும் அதிகமானோரைக் காணவில்லை. தேசியப் பேரிடர் தணிப்பு அமைப்பின் அதிகாரத்துவத் தகவல்களில் அந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
பாதிக்கப்பட்ட மாநிலங்களில் வெள்ளத்துக்குப் பின்னர், உடல்நலப் பிரச்சினைகள் அதிகரித்துவருவதை நாட்டின் சுகாதார அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. தேவைப்படுவோருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்க அது முயற்சி மேற்கொண்டுள்ளது.

