ஜகார்த்தா: இந்தோனீசிய அரசாங்கத்திற்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த 19,000க்கும் மேற்பட்ட யூடியூப் ஒளிவழிகளை மூன்றாம் காலாண்டில் கூகல் நிறுவனம் நீக்கியது.
ஜூலை முதல் செப்டம்பர் வரை 19,372 ஒளிவழிகள் நீக்கப்பட்டன. இரண்டாம் காலாண்டில் 437 ஒளிவழிகளும் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் 3,598 ஒளிவழிகளும் நீக்கப்பட்டதாக அந்நிறுவனம் வெளியிட்ட காலாண்டு அறிக்கையில் தெரிவித்தது.
அரசியல் நிலைப்பாட்டைப் பாராமல், ஒருங்கிணைந்த பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒளிவழிகளைத் தனது கொள்கைகளின் அடிப்படையில் கூகல் நீக்குகிறது.
நீக்கங்கள் குறித்து இந்தோனீசிய அரசாங்கத் தொடர்பு அமைப்பும் கூகல் நிறுவனமும் உடனடியாகக் கருத்து தெரிவிக்கவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் பிற்பகுதியில் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் நிர்வாகத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் அதிகரித்தன.
எனினும், போராட்டங்களுக்கும் இந்தப் பிரசாரங்களுக்கும் தொடர்புள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
அக்டோபர் 30ஆம் தேதி வெளியான அறிக்கையின்படி, இந்த ஒளிவழிகள் பெரும்பாலும் உள்ளூர் மொழியில் பிரபோவோ அரசாங்கத்தை ஆதரித்தும், விமர்சகர்களைச் சாடியும் செய்திகளைப் பகிர்ந்தன.
இந்தியா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக யூடியூப்பின் மூன்றாவது பெரிய சந்தையாக 155 மில்லியன் விளம்பரப் பார்வையாளர்களைக் கொண்ட இந்தோனீசியா உள்ளது.
