இந்தோனீசியப் புகைமூட்டம்: 2,600க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் பாதிப்பு

இந்தோனீசியப் புகைமூட்டம்: 2,600க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் பாதிப்பு

சிங்கப்பூர்ப் பயணப் பாதைக்குக் கடுமையான பாதிப்பு
படம்: ஏஎஃப்பி

20 Oct 2026 - 6:38 pm

2 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் காடுகளிலும் நிலப்பகுதிகளிலும் பற்றியெரியும் தீயினால் நீடிக்கும் புகைமூட்டம் விமானப் போக்குவரத்தைப் பாதித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் 2,600க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன், 14 அனைத்துலக விமானச் சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 11 முதல் அக்டோபர் 19 வரை 1,420 விமானச் சேவைகள் ரத்தாயின அல்லது ஒத்திவைக்கப்பட்டன. மேலும், 1,129 விமானச் சேவைகள் தாமதமடைந்தன. அவற்றுடன் 23 விமானச் சேவைகள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டதோடு ஆறு விமானச் சேவைகள் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிச் சென்றன. அவற்றுடன் 26 விமானச் சேவைகள் உரிய நேரத்திற்கு முன்பே புறப்பட்டன. இந்தோனீசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் லுக்மன் எஃப்.லைசா இந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ரத்துச் செய்யப்பட்ட 14 அனைத்துலகச் சேவைகளில், செப்டம்பர் 12 முதல் 23 வரை இயக்கப்பட்ட 12 சிங்கப்பூர்-பொந்தியானாக் இருவழி விமானச் சேவைகளும் அக்டோபர் 15ஆம் தேதி இயக்கப்பட்ட சிங்கப்பூர்-பாலம்பாங் இருவழி விமானச் சேவைகள் இரண்டும் அடங்கும் என்று அவர் கூறினார்.

பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு செயல்பாட்டு முடிவும் வானிலை நிலவரம், பார்க்கக்கூடிய தொலைவு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பாதுகாப்பு மதிப்பீடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஜெனரல் லைசா வலியுறுத்தினார்.

எனவே, நிலைமை பாதுகாப்பான செயல்பாடுகளுக்கு உகந்ததாக இல்லாவிட்டால் விமானச் சேவைகளின் அட்டவணைகள் மாற்றியமைக்கப்படக்கூடும் என்று அவர் சொன்னார்.

இதற்கிடையே, திங்கட்கிழமை இரவு 9 மணி நிலவரப்படி நாடு தழுவிய நிலையில் பற்றியெரியும் பகுதிகளின் எண்ணிக்கை 487ஆகக் குறைந்துள்ளது என்று வனத்துறை அமைச்சு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை 1,104ஆக இருந்தது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டபோதிலும், தென்சுமத்ரா, தென் கலிமந்தான் வட்டாரங்களில் பற்றியெரியும் பகுதிகள் கூடியிருப்பதாக அமைச்சு கூறியது.

தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக 61 விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில், காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவரப் படைவீரர்களும் தீயணைப்பாளர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தோனீசியாவில் பரவலாக எரியும் நெருப்பைக் கட்டுப்படுத்த மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன. இருப்பினும், இந்தோனீசியா அத்தகைய உதவியை இன்னும் ஏற்கவில்லை.

தீயைக் கையாள அரசாங்கத்திடம் போதிய வளங்கள் இருப்பதாக அரசியல், பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் டுடுங் அப்துராச்மன் தெரிவித்தார்.

“தேசியப் பேரிடர் என அறிவிக்கப்பட்டால் மட்டுமே வெளிநாடுகளின் உதவி கிடைக்கும்,” என்று அவர் சொன்னார்.

ஜகார்த்தாவில் திங்கட்கிழமை (அக்டோபர் 19) நடைபெற்ற அமைச்சர்நிலைக் கூட்டத்திற்குப் பிறகு, அமைச்சர் அந்தத் தகவலை வெளியிட்டதாக இந்தோனீசியச் செய்தி நிறுவனமான கொம்பாஸ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்