ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அரசாங்கத்துக்குச் சொந்தமான வணிகத்துறை அமைச்சு, அதன் ஊழியர்களின் நலனை மேம்படுத்த நான்கு நாள் வேலை வாரங்களைச் சோதித்துப் பார்க்கத் தொடங்கியுள்ளது.
இந்த வாரம் தொடங்கிய இத்திட்டம், அடுத்த இரு மாதங்களுக்கு சோதித்துப் பார்க்கப்படும் என்று கொம்பாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்தச் சோதனை ஓட்டத்தின்போது, அமைச்சின் ஊழியர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நான்கு வேலை நாள் கொண்ட வாரத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதற்குத் தகுதிபெற, நான்கு நாள்களில் அவர்கள் குறைந்தபட்சம் 40 மணி நேரம் வேலை செய்வதுடன், தங்களது கோரிக்கைக்கு அவர்களது மேற்பார்வையாளர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
நான்கு நாள் வேலை வாரம் ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்குமா என்பதைக் கண்டறிய இச்சோதனை ஓட்டம் இலக்கு கொண்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ரபின் இந்திரஜத் ஹத்தாரி கூறினார்.
திரு ரபினைப் பொறுத்தமட்டில், ஊழியர்களின் மனவுளைச்சல் அளவு குறித்து ஜனவரியில் நடத்தப்பட்ட ஆய்வில், மேம்பட்ட வேலை வாழ்க்கைச் சமநிலைக்கான தேவை இருந்தது தெரியவந்தது.
ஊழியர்களிடையே மனநலனை மேம்படுத்த, அரசாங்கத்துக்குச் சொந்தமான வணிகத்துறை அமைச்சர் எரிக் தோஹிர் கடந்த மார்ச் மாதம் இந்த நான்கு நாள் வேலை வாரத்தை முன்மொழிந்திருந்தார்.

