ஜகார்த்தா: இந்தோனீசியக் கடற்கரைப் பகுதிக்கு அருகே இயற்கை எரிவாயு இருப்பதாக மிகப்பெரிய கண்டுபிடிப்புப் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனமான எனி அதனைக் கண்டுபிடித்துள்ளது. அதன்மூலம் 2028ஆம் ஆண்டிற்குள் அந்நிறுவனத்தின் எரிசக்தி உற்பத்தி மும்மடங்காக அதிகரிக்கும் என்று இந்தோனீசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தோனீசியா, ஏற்கெனவே அது பயன்படுத்தும் எரிவாயுவைவிட அதிக அளவு எரிவாயுவை உற்பத்தி செய்கிறது. சமையல், மின்சார உற்பத்தி போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கான எரிவாயு தேவை அதிகரித்து வருகிறது.
கிழக்குக் களிமந்தான் மாநிலத்துக்குச் சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை எரிவாயு இருப்பதாக முதற்கட்ட கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. அங்கு 141 பில்லியன் கனமீட்டர் எரிவாயுவும் 300 மில்லியன் பீப்பாய் கொண்டேன்சேட் எனப்படும் திரவ ஹைட்ரோகார்பனும் இருப்பது தெரிய வந்துள்ளதாக எனி திங்கட்கிழமை (ஏப்ரல் 20) அறிக்கை மூலம் தெரிவித்தது.
உள்ளூர், அனைத்துலகச் சந்தைகளுக்குப் பயன்படக்கூடிய கணிசமான அளவு எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எனி குறிப்பிட்டது. இந்தக் கண்டுபிடிப்பு, 2028க்குள் அந்நிறுவனம், தினந்தோறும் தான் உற்பத்தி செய்யும் அதிகபட்ச எரிசக்தி அளவை 56 எம்எம்எஸ்சிடிக்கும் (million standard cubic metre) அதற்கு ஈராண்டுகளுக்குப் பிறகு அதனை 84 எம்எம்எஸ்சிடிக்கும் உயர்த்த வகைசெய்யக்கூடும் என்று இந்தோனீசிய அரசாங்கம் தெரிவித்தது.
செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) நிலவரப்படி அவ்விகிதம் 17லிருந்து 20 எம்எம்எஸ்சிடிக்கு இடைப்பட்டிருக்கிறது.
“இது மாபெரும் கண்டுபிடிப்பாகும். எரிவாயுவையும் தாண்டி 2028க்குள் கிட்டத்தட்ட 90,000 பீப்பாய் அளவு கொண்டேன்சேட்டையும் நாங்கள் உற்பத்தி செய்வோம். பிறகு 2029லிருந்து 2030க்கு இடைப்பட்ட காலத்தில் அது, மேலும் 150,000 பீப்பாய்க்கு அதிகரிக்கக்கூடும்,” என்று இந்தோனீசிய எரிசக்தி, கனிமவள அமைச்சர் பாஹ்லில் லஹாடியா குறிப்பிட்டார். கூடுதல் அளவில் கொண்டேன்சேட் உற்பத்தி செய்யப்பட்டால் அதன் மூலம் எண்ணெய் இறக்குமதிகள் குறைய வாய்ப்புள்ளதாக அவர் சொன்னார் என்று அரசாங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய கிழக்குப் பூசல் தொடங்கியதிலிருந்து பல நாடுகளைப் போல் இந்தோனீசியாவும், எரிசக்தி விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளது.

