ஜகார்த்தா: இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் சென்ற வாரம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் வழிப்போக்கர் ஒருவர் இறக்க நேரிட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறை அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவர்கள், ஊழியர்கள், உரிமைக் குழுவினர் ஆகியோர் சென்ற வாரம் முதல் ஆர்ப்பாட்டங்களை வழிநடத்தி வந்துள்ளனர். காவல்துறை வன்முறை, அரசாங்கம் செலவு செய்யும் அம்சங்கள் ஆகியவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.
மோட்டார்சைக்கிள் டாக்சி ஓட்டுநர் ஒருவர் காவல்துறை வாகனம் மோதியதைத் தொடர்ந்து உயிரிழந்தார். அதனால் உலகின் மூன்றாவது ஆகப் பெரிய ஜனநாயக நாடான இந்தோனீசியாவின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் பரவியுள்ளன.
ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 10 பேர் மாண்டுவிட்டனர். அதனையடுத்து கொள்ளையடித்தல், கலவரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகையும் ரப்பர் தோட்டாக்களும் பாய்ச்சப்பட்டன.
மோட்டார்சைக்கிளோட்டிமீது ஏறிய வாகனத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள் எழுவர் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரான கொஸ்மாஸ் காஜு கே பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய காவல்துறைப் பேச்சாளர் ட்ருனோயுடோ விஸ்னு அந்திக்கோ தெரிவித்தார். விசாரணைக்குப் பிறகு மோசமான நடத்தை காரணமாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து கொஸ்மாஸ் ஆலோசித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இதர ஆறு காவல்துறை அதிகாரிகளின் நிலை குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
இதற்கிடையே, ஜகார்த்தாவில் உள்ள இந்தோனீசிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகே வியாழக்கிழமை (செப்டம்பர் 4) அந்நாட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக மாணவர் குழு ஒன்று தெரிவித்தது. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்ற மாணவர்களின் விருப்பம் இன்னும் நிறைவேறாததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
நாடு முழுவதும் இந்தோனீசிய அதிகாரிகள் ஆர்ப்பாட்டங்களை முறியடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். 3,000க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று நியூயார்க்கில் இயங்கும் ‘ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்’ மனித உரிமைக் குழு வியாழக்கிழமை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
வன்முறையில் ஈடுபடும் குழுக்களுக்கு ராணுவமும் காவல்துறையும் விட்டுக்கொடுக்காது என்று இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கூறியுள்ளார். ஆர்ப்பாட்டங்களில் சிலர் பயங்கரவாதம், நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் அறிகுறிகள் தென்பட்டதாக திரு பிரபோவோ குறிப்பிட்டார்.