ஜகார்த்தா: இந்தோனீசியாவில் போதுமான அரிசி உள்ளதாக அதிபர் ஜோக்கோ விடோடோ கூறியிருக்கிறார்.
அரிசி விலை பல்லாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து அரிசி விநியோகத்தின் தொடர்பில் அக்கறைகள் எழுந்தன.
பணவீக்க விகிதம் தொடர்ந்து குறைவாக இருந்தபோதும், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவில், ஆகஸ்ட் மாதத்தில் அரிசி விலைகள் வெகுவாக அதிகரித்தன.
அரிசி விலை ஓராண்டுக்கு முன்னர் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில் சராசரியாக 16 விழுக்காடு அதிகரித்து கிலோ ஒன்றுக்கு 14,000 ரூப்பியா (S$1.20) எனப் பதிவானது. 2017 மார்ச் மாதத்திற்குப் பிறகு பதிவான ஆக அதிக விலை அது.
இந்நிலையில், இந்தோனீசியாவில் உள்ள கிடங்குகளில் அரசாங்கத்துக்குச் சொந்தமான 1.6 மில்லியன் டன் அரசி இருப்பதாகத் திரு ஜோக்கோவி குறிப்பிட்டார்.
மேலும், 400,000 டன் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாகவும்அவர் தெரிவித்தார்.