வடகொரியாவுக்குப் பயணம் செய்ய இந்தோனீசிய அதிபர் பிரபோவோ விருப்பம்

வடகொரியாவுக்குப் பயணம் செய்ய இந்தோனீசிய அதிபர் பிரபோவோ விருப்பம்

1 mins read
c68347cc-83f8-49ec-b131-d3e213440685
எந்தவொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிடாத நடுநிலை வெளியுறவுக் கொள்கையை இந்தோனீசியா உறுதியாகப் பின்பற்றி வருவதால், தங்களால் அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பாலமாகச் செயல்பட முடியும் என்று பிரபோவோ நம்பிக்கை தெரிவித்தார். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் கேட்டுக்கொண்டால், பேச்சுவார்த்தைகளைத் தொடங்க, தாம் வடகொரியா செல்லத் தயார் என்று இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தெரிவித்துள்ளார்.

ஜகார்த்தாவில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) நடைபெற்ற இந்தோனீசிய வர்த்தகச் சபை கூட்டத்தில் பேசிய அவர் இதனை வெளிப்படுத்தினார்.

கடந்த ஏப்ரல் மாதம் சோலுக்குத் தாம் மேற்கொண்ட பயணத்தின்போது தென்கொரிய அதிபர் இந்த வேண்டுகோளை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

எந்தவொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிடாத நடுநிலை வெளியுறவுக் கொள்கையை இந்தோனீசியா உறுதியாகப் பின்பற்றி வருவதால், தங்களால் அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பாலமாகச் செயல்பட முடியும் என்று பிரபோவோ நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், கொரிய தீபகற்பத்தில் அமைதியான சூழ்நிலையை உருவாக்க இரு நாடுகளுடனும் நல்லுறவு வைத்துள்ள இந்தோனீசியா போன்ற நாடுகள் ஆக்கபூர்வமான பங்காற்ற முடியும் என்று தென்கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆற்றல் பாதுகாப்பு, தற்காப்புத்துறை ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளின் இடையே இந்த அமைதி முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தென்கொரிய அதிபர் லீ, 2025ல் பதவியேற்றது முதல் வடகொரியாவுடனான பதற்றத்தைக் குறைக்க முயற்சி செய்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்