ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) எகிப்திற்குப் பயணம் மேற்கொள்வதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வளர்ந்துவரும் எட்டு முக்கிய முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பான ‘டி-8’ பொருளியல் ஒத்துழைப்பு அமைப்பின் (D-8) சந்திப்புகளில் அவர் கலந்துகொள்கிறார்.
‘டி-8’ அமைப்பில் பங்ளாதேஷ், எகிப்து, இந்தோனீசியா, ஈரான், மலேசியா, நைஜீரியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
தென்கிழக்காசியா முதல் ஆப்பிரிக்கா வரை அமைந்துள்ள இந்த நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் 1997ஆம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
வியாழக்கிழமை நடைபெறும் டி-8 உச்சநிலை மாநாடு உள்ளிட்ட சந்திப்புகளில் கலந்துகொள்ளும் திரு பிரபோவோ, 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஈராண்டுகளுக்கான ‘டி-8’ அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வார் என்று இந்தோனீசிய வெளியுறவு அமைச்சு கூறியது.
கடந்த அக்டோபர் மாதம் அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்ட திரு பிரபோவோ, இந்தோனீசியா நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கும் அணிசேரா வெளியுறவுக் கொள்கை தமது ஆட்சியிலும் தொடரும் என்று கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இந்தோனீசியாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் 20க்கு மேற்பட்ட நாடுகளுக்கு அவர் சென்றுவந்துள்ளார். சீனா, அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா ஆகிய நாடுகளும் அவற்றில் அடங்கும்.