ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் கலந்துரையாட ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) மாலை ரஷ்யா புறப்படவிருப்பதாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் உறுதிசெய்துள்ளது.
திரு புட்டினிடம் எண்ணெய் விவகாரம் குறித்துக் கலந்துரையாடத் திரு பிரபோவோ ரஷ்யா செல்வதாக இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் சுகியானோ குறிப்பிட்டார்.
அதிபர் புட்டினைச் சந்திக்கும் அதிபர் பிரபோவோ, அனைத்துலகப் புவிசார் அரசியல் குறித்தும் எரிசக்தி நிலவரம் பற்றியும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் திரு சுகியானோ சொன்னார்.
தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்ட திரு பிரபோவோ, எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்தப் பல்வேறு இடங்களுக்குச் செல்லவேண்டியிருப்பதாகத் தெரிவித்தார்.
பிற நாடுகளைப்போல மத்திய கிழக்குப் போரால் அதிகரிக்கும் எண்ணெய் விலை இந்தோனீசியாவையும் பாதித்துள்ளது.
எண்ணெய்யை மிச்சப்படுத்த இந்தோனீசிய அரசாங்கம், வாரத்துக்கு ஒரு நாள் வீட்டிலிருந்து வேலை செய்யும் கட்டாய நடைமுறையை அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் கடந்த வாரம் அறிவித்தது.
எண்ணெய் விலை உயர்த்தப்படாது என்றும் அரசாங்கம் வாக்குறுதியளித்தது.
இந்தோனீசியாவுக்கு எண்ணெய்யை விற்பனை செய்ய ரஷ்யா தயாராக இருப்பதாய் இந்தோனீசியாவுக்கான ரஷ்யத் தூதர் செர்கெய் டொல்செனொவ் கடந்த மாதம் கூறினார்.

