கவிழ்ந்த கப்பலை நிமிர்த்த இந்தோனீசிய மீட்புக் குழுவினர் முயற்சி

கவிழ்ந்த கப்பலை நிமிர்த்த இந்தோனீசிய மீட்புக் குழுவினர் முயற்சி

1 mins read
மோசமான வானிலையால், காணாமற்போன 129 பேரைத் தேடும் பணிகளில் இடையூறு
e7256c32-1c95-4758-8447-fac6a9dbd1ce
ஜாவா கடலில் விபத்துக்குள்ளான விர்கோ டிரான்ஸ்போர்ட் 8 கப்பலில் பயணம் செய்த ஒருவரை, செப்டம்பர் 15ஆம் தேதி மீட்புக் குழுவினர் மீட்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: ஜாவா கடலில் கடந்த வார இறுதியில் கவிழ்ந்த பயணிகள் கப்பலை நிமிர்த்த மீட்புக் குழுவினர் திட்டமிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காணாமற்போன 129 பேரையும் தேடும் பணிகளுக்கு வலுவான நீரோட்டமும் பேரலைகளும் தடையாக விளங்குவதால் கவிழ்ந்த கப்பலைச் சீரமைக்க மீட்புக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ என்ற அந்தப் பயணிகள் கப்பலில் 243 பேர் பயணம் செய்தனர். தென்கலிமந்தானில் உள்ள பஞ்சார்மாசின் துறைமுகத்தை நோக்கிச் சென்றபோது, செப்டம்பர் 13ஆம் தேதி அதிகாலையில் மோசமான வானிலையால் அது கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 108 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கவிழ்ந்த கப்பலைச் சீரமைத்து, நேராக நிமிர்த்திய பின்னரே தேடல், மீட்புப் பணிகளைத் தொடர முடியும் என்று தேசிய மீட்பு அமைப்பின் தலைவர் முகமது சியாஃபி தெரிவித்தார். இந்தோனீசியக் கடற்படையுடன் இணைந்து அமைப்பு இதன் தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளும் என்றார் அவர்.

சிக்கல் ஏதும் இல்லாவிட்டால் கப்பலை நிமிர்த்தும் நடவடிக்கை பொதுவாக 24 மணி நேரம் வரை எடுக்கும் என்றார் அவர்.

முன்னதாக, புதன்கிழமை (செப்டம்பர் 16) கடலடி நீரோட்டம் வேகமாக இருந்ததால், நீரில் மூழ்கித் தேடும் கடற்படை வீரர்கள் பின்வாங்க நேரிட்டது. வான்வழியிலும் கடற்பரப்பிலும் புதன்கிழமை தேடல் பணியில், பாதிக்கப்பட்ட யாரும் புதிதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. வியாழக்கிழமையும் பணிகள் தொடரும் எனக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்