மாணவர்கள் திரையைப் பார்க்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தும் இந்தோனீசியப் பள்ளிகள்

மாணவர்கள் திரையைப் பார்க்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தும் இந்தோனீசியப் பள்ளிகள்

2 mins read
641c0fa4-8230-4090-a97e-a427617408bd
ஏற்கெனவே இந்தோனீசியாவில் 16 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: மாணவர்கள் கைப்பேசிகள் போன்ற மின்சாரச் சாதனங்களின் திரையைப் பார்க்கும் நேரத்தைக் கட்டுப்படுத்த இந்தோனீசியப் பள்ளிகள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டன.

இந்தோனீசியாவில் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் அந்நாட்டின் கல்வி அமைச்சு இதன் தொடர்பில் வழிகாட்டிக் குறிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தோனீசியாவில் இன்னும் மூன்று வாரங்களுக்குள் 16 வயதுக்குக்கீழ் உள்ளவர்களுக்கான சமூக ஊடகத் தடை நடப்புக்கு வரவுள்ள வேளையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இம்மாதம் 28ஆம் தேதியிலிருந்து அத்தடை கட்டங்கட்டமாக நடப்புக்கு வரும். கடந்த திங்கட்கிழமை (மார்ச் 9) இந்தோனீசியாவின் தொடர்பு, மின்னிலக்க விவகார அமைச்சு இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் 2025ல் அறிமுகமான ‘பிபி டியுனாஸ்’ எனும் விதிமுறையின்கீழ் சிறார் மின்தளங்களைப் பயன்படுத்துவதற்கான தடை நடப்பு வருவது குறித்த தகவல் இடம்பெற்றுள்ளது.

திரைகளைப் பார்க்கும் நேரத்தைக் கட்டுப்படுத்துவது, பள்ளிகளில் திரை உள்ள சாதனங்களைப் பயன்படுத்துவதற்கென்று இடங்களை ஒதுக்குவது போன்ற பரிந்துரைகளைப் புதிய வழிகாட்டிக் குறிப்புகள் முன்வைப்பதாக இந்தோனீசியப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அப்துல் மு’த்தி தெரிவித்தார்.

“பிபி டியுனாஸ் ஆக்ககரமான முறையில் செயல்படும் என்ற நம்பிக்கையுடன் வழிகாட்டிக் குறிப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளோம்,” என்று திரு மு’த்தி கூறினார். மின்னிலக்க உலகில் சிறாரைப் பாதுகாப்பதன் தொடர்பில் தொடர்பு, மின்னிலக்க விவகாரங்கள் அமைச்சின் அமைச்சின் தலைமையில் நடைபெற்ற அமைச்சர்நிலைச் சந்திப்புக்குப் பிறகு அவர் பேசினார்.

பள்ளிகள் வழிகாட்டிக் குறிப்புகளைப் பெற்றோரிடம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உடல்நல, மனநல, மின்னிலக்க ரீதியாக மாணவர்களுக்குப் பாதுகாப்பான, வசதியான பள்ளிச் சூழல்களை உருவாக்குவதற்கான விதிமுறையை இந்தோனீசியப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சு கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருந்தது.

“பள்ளிகள் மாணவர்களுக்கு இன்னொரு வீடாக விளங்கும் வகையில் ஒருவருக்கொருவர் மரியாதை தருவதை ஊக்குவிக்கவும் கற்றலுக்கு மரியாதை தந்து ஆதரவளிக்கவும் வகைசெய்யும் பள்ளிக் கலாசாரத்தை உருவாக்க நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம்,” என்று திரு மு’த்தி புதன்கிழமை (மார்ச் 11) கூறினார்.

குறிப்புச் சொற்கள்