ஈராண்டுகளாக பள்ளிக்கு 8 கி.மீ. நடந்த மாணவருக்குக் குவியும் உதவி

ஈராண்டுகளாக பள்ளிக்கு 8 கி.மீ. நடந்த மாணவருக்குக் குவியும் உதவி

1 mins read
d3098e5e-bff1-4a64-b8d8-e9e100b76a41
8 கிலோமீட்டர் பயணம் ஒன்றரை மணி நேரம் எடுக்கும் என்று மாணவர் விக்கி கூறினார். படம்: டிக்டாக் -

மாணவர் ஒருவர் ஈராண்டுகளாகப் பள்ளிக்கு 8 கிலோமீட்டர் நடந்துசென்ற நாள்கள் இப்போது முடிவுக்கு வந்துள்ளன.

விக்கி என்ற அந்த மாணவர் ஒருமுறை மயக்கமடையும் தறுவாயில் இருந்ததை டிக்டாக் பயனாளர் ஒருவர் காணொளியில் பதிவுசெய்திருந்தார். உயர்நிலைப் பள்ளி மாணவரான 16 வயது விக்கிக்கு உதவ இந்தோனீசியர்கள் முன்வந்துள்ளனர்.

இணையத்தில் வெளியிடப்பட்ட அந்தக் காணொளி, தென் டங்கெராங் நகரின் துணை மேயர் பிலார் சாகா இச்சானின் கவனத்தையும் ஈர்த்தது. அந்தத் தொகுதியில் உள்ள விக்கியின் குடும்பத்தைச் சந்தித்து, அந்த மாணவருக்கு ஒரு மிதிவண்டியையும் கவசத்தையும் வழங்கினார்.

விக்கி பட்டயக் கல்வியுடன் படிப்பை முடிக்கவேண்டும் என்பதற்காக, அவருக்குக் கல்வி உதவி நிதியும் வழங்கப்பட்டதாக திரு பிலார் தெரிவித்தார்.

அந்த 8 கிலோமீட்டர் பயணம் ஒன்றரை மணி நேரம் எடுக்கும் என்று விக்கி கூறினார்.

தம் தந்தைக்கு அண்மையில் பக்கவாதம் ஏற்பட்டு அவர் தற்போது வேலையின்றி இருப்பதாகவும் தம் தாயார் ஓர் இல்லத்தரசி என்றும் விக்கி சொன்னார்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, டிக்டாக்கில் வெளியிடப்பட்ட முதல் காணொளி 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

இணையவாசிகளிடமிருந்து விக்கி மின் சைக்கிள், கைப்பேசி போன்ற அன்பளிப்புகள் பெற்றிருப்பதை மற்ற காணொளிகள் காட்டுகின்றன.