இந்தோனீசியத் துணை அதிபரின் கல்வித் தகுதி; நீதிமன்றத்தில் வழக்கு

இந்தோனீசியத் துணை அதிபரின் கல்வித் தகுதி; நீதிமன்றத்தில் வழக்கு

படம்: பெரித்தா ஹரியான்

22 Sep 2026 - 7:47 pm

2 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியத் துணை அதிபர் ஜிப்ரான் ரக்காபுமிங் ரக்காவின் கல்வித் தகுதி குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ள நிலையில், 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி மனுதாரர்கள் குழு ஒன்று நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தை அணுகியுள்ளது.

இந்தோனீசியாவில் அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்குப் போட்டியிடுவதற்கு மேல் உயர்நிலைக் கல்வி முடித்திருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தேவையாகும்.

38 வயது ஜிப்ரான், இந்தத் தகுதியைப் பெறவில்லை என்று முன்னாள் துணைச் சட்ட அமைச்சர் டென்னி இந்திராயானா உட்பட 11 மனுதாரர்கள் வாதாடியுள்ளனர்.

ஜிப்ரானின் வேட்புமனுவையும் அதைத் தொடர்ந்து அவர் துணை அதிபராகப் பதவியேற்றதையும் செல்லாததாக்க வேண்டும் என்று அவர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஜிப்ரான் மேற்கொண்ட வெளிநாட்டுக் கல்வியே இந்தச் சர்ச்சையின் மையப்புள்ளியாக உள்ளது.

இந்தோனீசியத் தேர்தல் ஆணையத்தின் பதிவுகளின்படி, ஜிப்ரான் 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரிலுள்ள ஆர்க்கிட் பார்க் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.

அதன் பிறகு, ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ‘இன்செர்ச்’ கல்லூரியில் அவர் தமது கல்விப் பயணத்தைத் தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரில் உள்ள எம்டிஐஎஸ் பள்ளியில் முழுநேர மாணவராகப் படித்து, சந்தைப்படுத்துதல் துறையில் பிரிட்டனின் பிராங்ஃபர்ட் பல்கலைக்கழகம் வழங்கும் உயர் பட்டயச் சான்றிதழையும் இளங்கலை (ஹார்னர்ஸ்) பட்டத்தையும் பெற்றார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜிப்ரான், இந்தோனீசியாவின் முன்னாள் அதிபர் ஜோக்கோ விடோடோவின் மூத்த மகனாவார்.

குறிப்புச் சொற்கள்