சக நாட்டவர் மூவரை மலேசியாவுக்குக் கடத்த முயன்ற இந்தோனீசியர்களுக்குச் சிறை

சக நாட்டவர் மூவரை மலேசியாவுக்குக் கடத்த முயன்ற இந்தோனீசியர்களுக்குச் சிறை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Nov 2026 - 5:53 pm

2 mins read

பெட்டாலிங் ஜெயா: மூன்று சக நாட்டவரை சட்டவிரோதமாக மலேசியாவுக்குக் கடத்தி வந்த குற்றத்திற்காக இந்தோனீசிய ஆடவர் இருவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஜோகூர் மாநிலம் பொந்தியானில் உள்ள மீன் பண்ணையில் சட்டவிரோதமாகப் பணியாற்றிய அவ்விருவருக்கும் ஜோகூர் பாரு உயர் நீதிமன்றம் நவம்பர் 18ஆம் தேதியன்று தண்டனை விதித்தது.

ஆள்கடத்தல் தடுப்பு, புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 26ஏ-யின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை இந்தோனீசியர்களான நஜ்ரில் இல்ஹாம், இஸ்வாடி இப்ராகிம் ஆகிய இருவரும் ஒப்புக்கொண்டதையடுத்து தண்டனையை விதிக்கப்பட்டது.

அவர்கள் கைதுசெய்யப்பட்ட நாளான ஏப்ரல் 2ஆம் தேதி முதல் அவர்களின் சிறைத்தண்டனை தொடங்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏப்ரல் 1ஆம் தேதி கூக்குப் பகுதியில் உள்ள மிதக்கும் மீன் கூண்டுத் தளத்தில் மூன்று இந்தோனீசியர்களைக் கடத்தியதாக நஜ்ரிலும் இஸ்வாடியும் குற்றம் சாட்டப்பட்டனர்.

வழக்கு விவரங்களின்படி, பொந்தியான் காவல்துறையினர் அப்பகுதியில் திடீர்ச் சோதனை நடத்தியபோது, மிதக்கும் வீட்டுப் பிரிவின் பராமரிப்பாளராகச் செயல்பட்ட இந்தோனீசிய ஆடவர் ஒருவரைக் கண்டனர். மலேசியாவிலிருந்து தப்பிக்க முயன்ற மேலும் மூன்று இந்தோனீசியர்களும் அங்கு இருந்தனர். அவர்கள் அனைவரும் காவல்துறையினரிடம் செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களைக் காட்டத் தவறினர்.

பின்னர், அந்த மூன்று இந்தோனீசியர்களை ஏற்றிச் செல்ல நஜ்ரிலும் இஸ்வாடியும் படகுகளில் வந்தனர். காவல்துறையினர் அவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்தபோதிலும், இருவரும் அச்சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினர். மறுநாள் கூக்குப்பில் உள்ள கடை ஒன்றில் காவல்துறையினர் அவர்களைக் கைதுசெய்தனர்.

இவர்களின் குற்றங்கள் மிகக் கடுமையானவை என்றும், இது மலேசியாவுக்கு உண்மையான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்