ஜகார்த்தா: இந்தோனீசிய அரசாங்கத்தின் மிக முக்கியத் திட்டமான பள்ளி மாணவர்களுக்கான இலவச உணவுத் திட்டம், பள்ளி விடுமுறை நாள்களில் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தின்மீதான நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில் அந்நாட்டு அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளது.
வரும் ஜூன் 22 முதல் ஜூலை 13 வரை இலவச உணவு வழங்கும் திட்டம் நிறுத்தப்படும் என்று தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் துணைத் தலைவரான அகஸ்டினா அரும்சாரி தெரிவித்தார்.
எதிர்காலத்திலும் பள்ளி விடுமுறை நாள்களில் இத்திட்டம் இடைநிறுத்தம் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஏறக்குறைய 76 பள்ளிகளைச் சேர்ந்த 39,000 மாணவர்களுக்கான உணவு நிதியுதவியை இந்நிறுவனம் நிறுத்தவுள்ளது. இதற்குப் பதிலாக அந்த நிதி வசதி இனி தொலைதூரப் பகுதிகளில் உள்ள பின்தங்கிய மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று மேலும் அவர் கூறினார்.
இதற்கிடையே அரசாங்கத்தின் இலவச ஊட்டச்சத்து உணவுத் திட்டத்தில் பெரிய அளவில் நடந்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் விவகாரம் தொடர்பில் ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்களை அந்நாட்டின் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் கொள்முதல் செய்த அவற்றை இந்தோனீசியாவின் தலைமைச் சட்ட அலுவலகம் பறிமுதல் செய்யத் தொடங்கியுள்ளது.
கடந்த ஜூன் 17ஆம் தேதி மேற்கு ஜாவாவில் உள்ள போகோர் பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் அதிரடிச் சோதனை நடத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
அங்கு இந்த மோட்டார் சைக்கிள்கள் பல மாதங்களாகப் பயன்படுத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
மின்சார மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கையைச் சரிபார்ப்பதும், அந்த கிடங்கிற்குச் சீல் வைப்பதுமே இந்தச் சோதனையின் நோக்கம் என்று கொம்பாஸ் ஊடகத்திடம் புலனாய்வு இயக்குநர் சியாரீஃப் சுலைமான் நஹ்தி தெரிவித்தார்.
கடந்த 2025ஆம் ஆண்டில் இந்த இலவச உணவுத் திட்டத்தின்கீழ் இயங்கும் சமையல் கூடங்களின் தலைவர்களுக்காக 21,000க்கும் மேற்பட்ட மின்சார மோட்டார் சைக்கிள்களை தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் கொள்முதல் செய்திருந்தது.
இதன் மொத்த மதிப்பு ஒரு டிரில்லியன் ரூப்பியாவுக்கும் (S$ 72.5 மில்லியன்) அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பெரும் கொள்முதலில்தான் தற்போது முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புலனாய்வு அமைப்பு வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

