இந்தோனீசியாவின் தேசிய வீரர் சுகார்த்தோ

1 mins read
be8f59ae-4884-4499-a8ad-9401435ded61
இந்தோனீசிய அதிபர் பிரபாவோ சுபியாந்தோ (வலம்), முன்னாள் அதிபர் சுகார்த்தோவின் மகன் பம்பாங் டிரிஹாட்மோட்ஜோ, மகள் சிட்டி ஹர்டிஜாந்தி ருக்மானா ஆகியோருக்குப் பாராட்டு தெரிவிக்கிறார். - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசியா, அதன் இரண்டாவது அதிபரும் சக்திவாய்ந்த அரசியல்வாதியுமான காலஞ்சென்ற சுகார்த்தோவை ‘தேசிய வீரர்’ என்று பட்டமளித்துக் கௌரவித்துள்ளது.

அவரது முன்னாள் மருமகனும் தற்போதைய அதிபருமான பிரபாவோ சுபியாந்தோ அந்தக் கௌரவத்தை சுகார்த்தோவுக்கு அளித்துள்ளார். ஆனால் பல சமூக ஆர்வலர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

1998ஆம் ஆண்டில் ஆசிய நிதி நெருக்கடியின்போது அவரது 32 ஆண்டுகால ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் கலவரங்களும் நடைபெற்றன. இதனால் சுகார்த்தோ பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ராணுவ அதிகாரியான சுகார்த்தோ, 1967ல் நாட்டின் முதல் அதிபரான சுகார்னோவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி அதிபரானார். 1967 முதல் 1998 வரை அவர் இந்தோனீசியாவை ஆட்சி செய்தார். நாட்டின் பொருளியலையும் ராணுவத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்தும் நாட்டு மக்களை அச்சுறுத்தியும் அவர் ஆட்சி நடத்தினார். அவரது ஆட்சியில் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டு நாடு வளர்ச்சி அடைந்தது. ஆனால் அதற்கு ஜனநாயகத்தை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது.

2008ஆம் ஆண்டில் தனது 87வது வயதில் சுகார்த்தோ காலமானார்.

“மத்திய ஜாவா மாகாணத்தின் முக்கிய நபரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஜெனரல் சுகார்த்தோ இந்தோனீசியா சுதந்திரம் அடைந்த சகாப்தத்தில் தனித்து நிற்கிறார்,” என்று விருது விழங்கும் நிகழ்ச்சியில் அதிபர் பிரபோவோ தெரிவித்தார்.

விருதை சுகார்த்தோவின் மகனும் மகளும் பெற்றுக்கொண்டனர்.

இந்தோனீசியா 1945ல் அப்போதைய காலனித்துவ சக்திகளான நெதர்லாந்து மற்றும் ஜப்பானிடமிருந்து சுதந்திரம் பெற்றது.

குறிப்புச் சொற்கள்