தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரிலிருந்து குறைவான எரிபொருள்: கேள்விகளை எழுப்பும் இந்தோனீசியாவின் முடிவு

1 mins read
09a71c29-f0b4-4241-9b63-0433bf686c23
இந்தோனீசியாவில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் பாதி அளவு சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.  - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: சிங்கப்பூருக்குப் பதிலாக அமெரிக்காவில் இருந்து கணிசமான அளவில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான இந்தோனீசியாவின் திட்டம் கேள்விகளை எழுப்பி உள்ளது.

அமெரிக்காவிலிருந்து எரிபொருளைத் தருவிக்க, சிக்கல் மிகுந்த கடல்வழிகளில் நீண்டதூரக் கடற்பயணம் மேற்கொள்ளப்படுவதால் போக்குவரத்துச் செலவுகளும் காப்புறுதிக் கட்டணங்களும் அதிகமாக இருக்கும் என்ற கவலைகளும் அந்நாட்டில் எழுந்துள்ளன.

அமெரிக்காவுடனான இந்தோனீசியாவின் வர்த்தகம் மிதமிஞ்சி இருப்பதற்குப் பதிலளிக்கும் விதமாக இந்தோனீசியா மீது அமெரிக்கா 32 விழுக்காடு வரி விதித்துள்ளது. அந்த வரி விகிதம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், எரிபொருள் வாங்கும் திட்டத்தை ஜகார்த்தா வகுத்து வருகிறது.

மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியாவிலிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி, சுத்திகரித்த பின்னர் இந்தோனீசியா போன்ற நாடுகளுக்கு அதனை சிங்கப்பூர் ஏற்றுமதி செய்கிறது.

இந்தோனீசியாவில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் பாதி அளவுக்கு மேல் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

அதேநேரம், 2024ஆம் ஆண்டு 0.1 விழுக்காட்டுக்கும் குறைவான எரிபொருளை மட்டுமே அமெரிக்காவில் இருந்து இந்தோனீசியா இறக்குமதி செய்தது.

இந்நிலையில், சில எரிபொருள் இறக்குமதிகளை சிங்கப்பூரில் இருந்து படிப்படியாக மாற்ற உள்ளதாக இந்தோனீசிய எரிசக்தி, தாதுவள அமைச்சர் பஹ்லில் லஹாடாலியா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மே 9) கூறி இருந்தார்.

ஆனால், அந்தத் திட்டத்தை தளவாடச் செலவுகளைக் கவனத்தில் கொண்டு இந்தோனீசிய அரசாங்கம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று இந்தோனீசியப் பல்கலைக்கழகத்தின் எரிசக்தி பகுப்பாய்வாளர் பேராசிரியர் ஐவா கர்னிவா, ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்