ஜகார்த்தா: இந்தோனீசிய அரசு அமைப்புகளை விரிவுபடுத்தும் திட்டத்தை அந்நாட்டின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரபோவோ சுபியாந்தோ தற்காத்துப் பேசியுள்ளார்.
அவரது இத்திட்டத்தை எதிர்த்து அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.
ஆனால் வலுவான நிர்வாகத்துக்கு அரசு அமைப்புகளை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாகத் திரு பிரபோவோ வலியுறுத்தியுள்ளார்.
திரு பிரபோவோ, அக்டோபர் 20ஆம் தேதியன்று இந்தோனீசியாவின் அதிபராகப் பதவி ஏற்க இருக்கிறார்.
கூடுதலாகப் பத்து அமைச்சுகள், அரசு அமைப்புகளை அமைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
திரு பிரபோவோவின் தலைமையில் ஏழு கட்சிகளைக் கொண்ட கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
ஆளும் கூட்டணியில் இடம்பெறும் அரசியல்வாதிகளுக்கு மேலும் பல உயர் பதவிகளை வழங்க திரு பிரபோவோ இந்நடவடிக்கையை மேற்கொள்வதாகச் சிலர் விமர்சித்துள்ளனர்.
ஆனால் இதைத் திரு பிரபோவோ மறுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“ஒற்றுமையான, வலுவான அரசாங்கத்தை அமைக்க விரும்புகிறேன். கூட்டணி பெரிதாக இருக்க வேண்டும். எனது அமைச்சரவை மிகவும் பெரிதாக இருக்கிறது என்று சிலர் கூறுவர்,” என்று அக்டோபர் 9ஆம் தேதியன்று நடைபெற்ற பொருளியல் கருத்தரங்கில் திரு பிரபோவோ தெரிவித்தார்.

