ஜகார்த்தா: இந்தோனீசியாவின் புதிய தலைநகரில் உள்ள முக்கிய கட்டடங்கள் அடுத்த நான்கு ஆண்டுகளில் தயாராகிவிட வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாந்தோ வலியுறுத்தியுள்ளார்.
புதிய தலைநகரமான நுசாந்தாராவைக் கட்ட $42 பில்லியன் செலவாகியுள்ளது.
தற்போதைய தலைநகரமான ஜகார்த்தாவில் கூட்ட நெரிசல் மிகவும் மோசமாக நுசாந்தாராவைப் புதிய தலைநகரமாக்க முன்னாள் அதிபர் ஜோக்கோ விடோடோ முடிவெடுத்தார்.
நுசாந்தாரா, போர்னியோ தீவில் உள்ளது.
“இந்தோனீசியாவின் அடுத்த அதிபர், துணை அதிபர் பதவி ஏற்பு விழா 2029ஆம் ஆண்டில் நடைபெறும். அந்த விழா நுசாந்தாராவில் நடைபெற வேண்டும் என்று அதிபர் பிரபோவோ விரும்புகிறார்,” என்று இந்தோனீசியாவின் வனத்துறை அமைச்சர் ராஜா ஜுலி அண்டோனி அக்டோபர் 26ஆம் தேதியன்று இன்ஸ்டகிராமில் பதிவிட்டார்.
அதிபர் பிரபோவோவின் தலைமையின்கீழ் புதிய தலைநகருக்கான பணிகள் தீவிரமாக நடைபெறும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
“அதிபர் பிரபோவோவைப் பொறுத்தவரை, நுசந்தாரா அரசியலுக்கான தலைநகரம். எனவே, அதிபர் மாளிகை, நாடாளுமன்றக் கட்டடம் போன்ற முக்கிய அரசாங்கக் கட்டடங்களை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் கட்டி முடித்துவிட வேண்டும்,” என்றார் அமைச்சர் ராஜா ஜுலி.