ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அடுத்த அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் பிரபோவோ சுபியாந்தோ பெரும்பான்மை பலத்துடன் நாட்டை ஆட்சி செய்ய இருக்கிறார்.
பிப்ரவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் திரு பிரபோவோவை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சியான நாஸ்டெம் கட்சி தற்போது திரு பிரபோவோவின் பக்கம் சாய்ந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் 10 விழுக்காடு இடங்கள் அக்கட்சியின் வசம் உள்ளன.
இதன்மூலம் 52 விழுக்காடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரு பிரபோவோ பெற்றுள்ளார்.
இதன் விளைவாக சட்டம் தொடர்பான செயல்முறைகள் சுமுகமாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்குவதும் இதில் அடங்கும்.
இந்தோனீசியாவின் அதிபராக திரு பிரபோவோவும் துணை அதிபராக திரு ஜிப்ரான் ரக்காபுமிங் ரக்காவும் அக்டோபர் 20ஆம் தேதியன்று பதவி ஏற்பர்.
திரு ஜிப்ரான், தற்போதைய இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
திரு பிரபோவோவுக்கு ஆதரவு வழங்குவதால் கூடுதல் அமைதியான சூழல் நிலவும் என்றும் புதிய அரசாங்கம் சுமுகமான முறையில் இயங்கலாம் என்றும் நாஸ்டெம் கட்சியின் தலைவர் திரு சூர்யா பாலோ கூறினார்.

