இம்பால்: இந்தியா-மியன்மார் எல்லையில் பயங்கரவாதிகள் 10 பேர் இந்தியப் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தியா- மியன்மார் எல்லையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து ராணுவம் களத்தில் இறங்கியது.
புதன்கிழமை (மே 14) இரவு ராணுவ கிழக்கு கமாண்ட் பிரிவின் ஸ்பியர் கார்ப்ஸ், அசாம் ரைபிள்ஸ் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தையொட்டியுள்ள மியன்மார் எல்லையில், மணிப்பூரின் சண்டல் மாவட்டத்தின் நியூ சம்டால் கிராமம் அருகே பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டை நடத்தினர்.
இதில் பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
“பத்துப் பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டன,” என்று ராணுவம் புதன்கிழமை அன்று எக்ஸ் ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டது.
இது தொடர்பாக பேசிய பாதுகாப்புத் துறை அதிகாரிகள், “தேடுதல் நடவடிக்கையின்போது, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டு அங்கிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் மீட்கப்பட்டன,” என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் பயங்கர வாதிகளைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
2021 பிப்ரவரியில் மியன்மார் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அங்கு நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக இந்தியா-மியன்மார் பகிர்ந்துகொள்ளும் 1,650 கி.மீ. (1,025 மைல்) எல்லை நிலைத்தன்மை இல்லாமல் ஆபத்தில் உள்ளது.