மலேசியாவில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: உலக வங்கி

மலேசியாவில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது: உலக வங்கி

படம்: மலாய் மெயில்

06 Oct 2026 - 6:01 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியாவின் பணவீக்கம் வட்டார அளவில் ஆகக் குறைந்த நிலையில் உள்ளபோதிலும், உற்பத்திச் செலவு அதிகரிப்பால் இந்த ஆண்டின் இறுதியில் பணவீக்க அபாயம் ஏற்படக்கூடும் என்று உலக வங்கியின் முதன்மைப் பொருளியலாளர் அபூர்வா சங்கி எச்சரித்துள்ளார்.

அக்டோபர் 2026 கிழக்கு ஆசியா, பசிபிக் பொருளியல் அறிக்கை தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

உற்பத்தியாளர் விலை பணவீக்கம் 2023 டிசம்பரில் எதிர்மறையாக இருந்து, இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் கிட்டத்தட்ட 11 விழுக்காடாக உயர்ந்ததால் இந்த அழுத்தம் அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மலேசியா 1.9 விழுக்காடு எனும் குறைந்த பணவீக்கத்தைப் பதிவுசெய்தது.

இது தாய்லாந்து (2.5 விழுக்காடு), இந்தோனீசியா (3.2 விழுக்காடு), வியட்னாம் (4.9 விழுக்காடு), பிலிப்பீன்ஸ் (6.1 விழுக்காடு) ஆகிய அண்டை நாடுகளின் பணவீக்கத்தைவிடக் குறைவாகும்.

அரசாங்க மானியங்கள் குடும்பங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதால் எரிசக்தி விலை உயர்ந்தபோதிலும் பணவீக்கத்தின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது.

இதனால் இந்த ஆண்டில் ஒட்டுமொத்த பணவீக்கம் மிதமாக 2 விழுக்காடாகவே இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

மாதம் 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக ஈட்டும் குறைந்த வருமானக் குடும்பங்கள் மிதமான விலை அழுத்தத்தையே எதிர்கொண்டன. ஆண்டின் முதல் பாதியில் அவர்களுக்கான சராசரி பணவீக்கம் 1.2 விழுக்காடாக இருந்தது.

அக்குடும்பங்களின் வருமான வளர்ச்சியும் அரசாங்க உதவிகளும் வாழ்க்கைச் செலவினங்களைவிட அதிகமாகவே உயர்ந்துள்ளன.

மலேசியாவின் பொருளியல் வளர்ச்சி எதிர்பார்ப்பைவிடச் சிறப்பாக உள்ளது. இதற்கு வெளிநாட்டுத் தேவை முக்கியப் பங்காற்றிய நிலையில், உள்நாட்டுத் தேவையும் துணை நின்றது.

தனியார் பயனீட்டு வளர்ச்சி முதல் காலாண்டில் 4.7 விழுக்காட்டிலிருந்து இரண்டாவது காலாண்டில் 4.8 விழுக்காடாக உயர்ந்தது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாபணவீக்கம்உலக வங்கி

தொடர்புடைய செய்திகள்