தோக்கியோ: ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகஸ்ட்டில் பதவி விலகவிருப்பதாக மைனிச்சி நாளேடு ஜூலை 23ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில் ஆளும் கூட்டணி படுதோல்வி அடைந்தது.
இதையடுத்து திரு இஷிபாவின் பதவி ஆட்டம் கண்டுள்ளது.
மேலவைத் தேர்தலில் தோல்வியடைந்ததற்காக அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அமெரிக்க வரி விதிப்பு பேச்சுவார்த்தை காரணமாக பதவியில் நீடிக்கப்போவதாகக் கூறியிருந்தார்.
மேலும் பயனீட்டாளர் விலை அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களைக் கண்காணித்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே திரு இஷிபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.
திரு இஷிபாவின் பதவிக்காலம் அதிக நாட்கள் நீடிக்காது என்று அரசியல் நிபுணர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு நடைபெற்ற கீழவைத் தேர்தலிலும் அவரது கட்சி தோல்வி அடைந்திருந்தது.
இந்நிலையில் பிரதமர் இஷிபா பதவி விலகுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் அவர் பதவி விலகலாம் என மைனிச்சி நாளேடு கணித்துள்ளது.
ஆளும் கூட்டணியின் எதிர்ப்பையும் மீறி ஆட்சியில் நீடிக்க சபதம் செய்துள்ள திரு. இஷிபாவுக்கு அவரது லிபரல் ஜனநாயகக் கட்சியிலேயே எதிர்ப்பு வலுத்து வருகிறது.
ஆனால் அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சு எட்டப்பட்டதும் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பு ஏற்பது குறித்து கட்சியினரிடம் விளக்கப்போவதாக ஜூலை 22ஆம் தேதி திரு இஷிபா கூறினார்.