மலாக்கா: கார் மோதி விபத்துக்குள்ளானபோதும் காயத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தமது பணியைச் செய்த உணவு விநியோக ஊழியரின் செயல் சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.
மலாக்காவில் ஜூலை 25ஆம் தேதி அச்சம்பவம் நடந்தது. ஹாவோயீ யோ என்ற வாடிக்கையாளர் விநியோக ஊழியர் நொண்டி நொண்டி நடந்து வருவதைக் கண்டு விசாரித்துள்ளார்.
சற்று முன்னர் அவர் விபத்தில் சிக்கியதையும் ஒற்றைப் பெற்றோர் என்பதால் வாழ்வாதாரத்திற்காகத் தொடர்ந்து உழைக்கவேண்டிய கட்டாயத்தில் அவர் இருப்பதையும் அறிந்தார்.
“என்னால் ஓய்வெடுக்க முடியாது” என்று அவர் கூறிய வார்த்தைகள் யோ-வின் மனதை உலுக்கியுள்ளது.
அவருக்கு ஊக்கத்தொகையாக 5 மலேசிய ரிங்கிட் (S$1.50) வழங்கிய யோ, அச்சம்பவத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார்.
“உணவு விநியோக ஊழியர்களின் கடின உழைப்பைப் புரிந்துகொண்டு அவர்களிடம் பொறுமையாக நடந்துகொள்ளுங்கள்,” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
அப்பதிவு இணையத்தில் 30,000க்கும் மேற்பட்ட விருப்பங்களைப் பெற்றது. பலரும் தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்ததோடு அவருக்கு உதவ முன்வந்தனர். ஒரு பாரம்பரிய சீன மருத்துவ நிபுணர், அந்த ஊழியரின் காயத்திற்கு இலவசமாகச் சிகிச்சை அளிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அந்த ஊழியரின் தொடர்பை மீண்டும் பெற முடியாவிட்டாலும், முகம் தெரியாத ஒருவருக்கு உதவ பலரும் முன்வந்தது மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை உயர்த்தியுள்ளதாக யோ தெரிவித்துள்ளார்.

