ஜெனீவா: செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் புத்தாக்கத் துறையிலான முதலீடுகளைப் பெரிதும் தூண்டிவிட்டுள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 29) தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, வர்த்தக நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளன.
ஐநாவின் காப்புரிமை மற்றும் புத்தாக்க அமைப்பான உலக அறிவுசார் உடைமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்குரிமை ஒப்பந்தங்களின் எண்ணிக்கை குறைந்து, அவை பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களை நோக்கியே குவிந்து வந்தபோதிலும், நிறுவனங்களுக்குச் செல்லும் மொத்த முதலீட்டுத் தொகை கணிசமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது புதிய கண்டுபிடிப்புகளுக்கான கால அளவைக் குறைப்பதோடு, உலகப் பொருளியல் வளர்ச்சிக்கும் பெரும் உந்துசக்தியாக விளங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து உலக அறிவுசார் உடைமை அமைப்பின் தலைவர் டாரன் டாங் செய்தியாளர்களிடம் கருத்துரைத்தார்.
“செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு திருப்புமுனைத் தொழில்நுட்பம் மட்டுமல்ல, புதுமைகளைப் படைக்கும் மற்றும் உருவாக்கும் முறையையே அது மாற்றியமைக்கப் போகிறது. புதிய தலைமுறையைச் சேர்ந்த ஆழ்ந்த அறிவியல் சார்ந்த ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்கள், இந்த அதிநவீனத் தொழில்நுட்பங்களை நடைமுறைச் செய்பொருள்களாக மாற்றி உயிரியல் அறிவியல், விண்வெளி, மனித இயந்திரவியல், தூய்மை எரிசக்தி ஆகிய துறைகளில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.
2026ஆம் ஆண்டிலும் புத்தாக்க முதலீடுகள் தளர்வடையாமல் உறுதியாகவும் மீள்திறனுடனும் திகழ்வதாகவும் மீண்டும் வளர்ச்சிப்பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாகவும் திரு டாங் தெரிவித்தார்.
அமைப்பின் மதிப்பீட்டின்படி, 2026ஆம் ஆண்டில் உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினம் 3.4 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியைவிட அதிவேகமான வளர்ச்சியாகும். அதேவேளையில், வர்த்தக நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவினம் 2025ஆம் ஆண்டில் 5.8 விழுக்காடு உயர்ந்து, சாதனை அளவாக 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
