உணவில் பூச்சிகள், உடல்நலப் பாதிப்பு; டெக்சஸில் தவிக்கும் சட்டவிரோதக் குடியேறிகள்

உணவில் பூச்சிகள், உடல்நலப் பாதிப்பு; டெக்சஸில் தவிக்கும் சட்டவிரோதக் குடியேறிகள்

படம்: ஏஎஃப்பி

08 Feb 2026 - 5:46 pm

1 mins read

டில்லே: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சட்டவிரோதக் குடியேறிகள் சரியான உணவு இல்லாமலும் உடல்நலப் பாதிப்பாலும் தவித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நாட்டிற்குள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் குறிவைத்து அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

டெக்சஸ் மாநிலத்தில் கைது செய்யப்படும் சட்டவிரோதக் குடியேறிகளின் நிலைமை சற்று கவலையளிக்கும் வகையில் உள்ளது.

மாநிலத்தின் ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ள தடுப்புக் காவல் நிலையங்களில் கைது செய்யப்படும் சட்டவிரோதக் குடியேறிகள் அடைத்து வைக்கப்படுகின்றனர். சரியான சுகாதாரம் இல்லாததால் அங்கு நோய்த்தொற்று சம்பவங்கள் ஏற்படுகின்றன.

மெக்சிகோவின் எல்லைக்கு அருகே அமைந்துள்ள டில்லே தடுப்புக் காவல் நிலையத்தில் உள்ளவர்கள், அதிகாரிகள் தங்களைக் கட்டாயப்படுத்தி ஆவணங்களில் கையெழுத்திட வைப்பதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

“அரசியல் காரணங்களுக்காக அமெரிக்காவிற்குள் தஞ்‌‌சம் புகுந்தவர்களைக் கட்டாயப்படுத்தி நாடு கடத்துவது தவறானது, குழந்தைகளையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை” என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

தங்குமிடங்களில் எப்போதுமே விளக்குகள் எரிவதால் சரியாகத் தூங்க முடியவில்லை என்று தடுத்துவைக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல், சில நாள்களுக்கு முன்னர் உணவில் பூச்சிகள் இருந்ததால் தடுப்புக் காவல் நிலையத்தில் பிரச்சினை ஏற்பட்டது. மேலும் அங்கு இரு தட்டம்மை சம்பவங்களும் பதிவாகின.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்