கோலாலம்பூர்: மலேசியாவில் ‘இன்ஸ்பெக்டர் ஷீலா’ எனப் பலரால் அழைக்கப்படும் காவல்துறை அதிகாரி மீது கோலாலம்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஷீலா ஷரன் ஸ்டீவன் குமார் என்ற 37 வயது காவல்துறை அதிகாரி மீது, வேண்டுமென்றே இன்னொரு காவல்துறை அதிகாரிக்கு இடையூறு விளைவித்ததாக புதன்கிழமை (நவம்பர் 12) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன. லான்ஸ் கார்ப்பரல் மல்விந்தர்ஜித் சிங் டீரத் சிங், 37, எனும் காவல்துறை அதிகாரிக்கு சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபடவிடாமல் இன்ஸ்பெக்டர் ஷீலா இடையூறு விளைவித்ததாக நம்பப்படுகிறது.
இம்மாதம் நான்காம் தேதி இரவு 8.15 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள டாங் வாங்கி (Dang Wangi) உணவகத்துக்கு வெளியே ஷீலா, மல்விந்தர்ஜித் சிங்கை மோசமாகத் திட்டிக்கொண்டிருந்தார் என்று மலாய் மெயில் ஊடகம் தெரிவித்தது.
அச்சம்பவம் பதிவான காணொளியை ஷீலா சமூக ஊடகத் தளங்களில் பதிவேற்றம் செய்தார். காவல்துறை அதிகாரிகள் சிலர், பாகிஸ்தானிய மோட்டார்சைக்கிளோட்டி ஒருவரைப் பயமுறுத்தியது அதற்குக் காரணம் என ஷீலா கூறியிருந்தார்.
குற்றச்சாட்டை ஷீலா ஒப்புக்கொள்ளவில்லை என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக ஈராண்டுச் சிறைத் தண்டனையும்10,000 ரிங்கிட் (3,150 வெள்ளி) வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
ஷீலா, பணியில் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்பட்டதையடுத்து ஏற்கெனவே 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

