கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் நீர்வள, நிலம், இயற்கை வளங்கள் அமைச்சரான சேவியர் ஜெயக்குமாருக்கு எதிரான ஊழல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
வழக்கின் உண்மைகள், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் அனைத்தும் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் ஆய்வு செய்யப்பட்டதாக ஊழல் தடுப்பு ஆணையம் புதன்கிழமை (ஆகஸ்ட் 19) வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க வழக்கறிஞர் மேற்கொண்ட விரிவான மறுஆய்வுக்குப் பின்னர், டாக்டர் சேவியர் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்குப் போதிய சட்டபூர்வ ஆதாரங்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, 2024ஆம் ஆண்டிலேயே இந்த வழக்கு விசாரணைப் பத்திரங்கள் கோப்புக்கு மாற்றி வைத்தல் என வகைப்படுத்தப்பட்டு முடிக்கப்பட்டதாக ஆணையம் விளக்கியுள்ளது.
சட்ட நடைமுறைகளின்படி, ஒரு வழக்கு கோப்புக்கு மாற்றி வைக்கப்பட்டால் அதன் விசாரணை முழுமையாக நிறைவடைந்து, செயலற்ற நிலைக்குச் சென்றுவிட்டதாகப் பொருள்படும்.
புதிய வலுவான ஆதாரங்கள் ஏதேனும் எதிர்காலத்தில் வெளிவந்தால் மட்டுமே இவ்வழக்கு மீண்டும் தூசு தட்டப்படும். ஒரு வழக்கின் தன்மையைப் பொறுத்தும், ஆவணங்கள் மற்றும் சான்றுகளைச் சரிபார்த்து உறுதிப்படுத்துவதற்கான தேவையைப் பொறுத்துமே புலன்விசாரணையின் கால அளவு தீர்மானிக்கப்படுவதாக ஊழல் தடுப்பு ஆணையம் குறிப்பிட்டது.
மேலும், எந்தவொரு தரப்பின் தலையீடும் இன்றி, உண்மைகளையும் ஆதாரங்களையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வெளிப்படையாகவும் நிபுணத்துவத்துடனும் அனைத்து விசாரணைகளும் நடத்தப்படுவதாக அது வலியுறுத்தியது.
“இவ்வழக்கின் விசாரணை முழுமையாக முடிவடைந்துவிட்டதால், இது குறித்து பொதுமக்கள் அல்லது பல்வேறு தரப்பினர் எவ்வித தவறான ஊகங்களையோ கற்பனையான கருத்துகளையோ தெரிவிக்க வேண்டாம்” என்றும் அந்த அறிக்கையில் ஊழல் தடுப்பு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது


